திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை

நுகர்வினால் அவாவறுத்தல் கூடாதெனல்

5.
வகையெழிற் றோள்க ளென்றும்
   மணிநிறக் குஞ்சி யென்றும்
புகழெழ விகற்பிக் கின்ற
   பொருளில் காமத்தை மற்றோர்
தொகையெழுங் காத றன்னாற்
   றுய்த்தியாந் துடைத்து மென்பா
ரகையழ லழுவந் தன்னை
   நெய்யினா லவிக்க லாமோ.

     (இ - ள்.) வகை எழில் தோள்கள் என்றும் - இலக்கண
வகுப்பிற்கியைந்த தோள்கள் இவனுடைய தோள்கள் என்றும்: மணி
நிறம் குஞ்சி என்றும் - இவனுடைய மயி்ர்க்குடுமி நீல மணியினது
நிறம் போன்ற நிறமுடைய குடுமி என்றும்; புகழ் எழ விகற்பிக்கி்ன்ற -
அவற்றிற்கில்லாத புகழ் உண்டாகும்படி பலபடப் பாரித்துக் கூறுதற்குக்
காரணமான; பொருள் இல் காமத்தை - வாய்மையினோக்குவார்க்கு
ஒரு சிறிதும் பொருள் இல்லாததாகிய காமவின்பங்களை; மற்று ஓர்
தொகை எழும் காதல் தன்னால் - ஒரு தொகுதியாகத் தம்பால்
தோன்றுகின்ற காமக் கிளர்ச்சியாலே; துய்த்து - (அவற்றையெல்லாம்
எய்தி) நுகர்ந்து ; யாம் துடைத்தும் என்பார் - அக் காமக்குணத்தை
அழிக்கக் கடவேம் என்று ஒரு சிலர் கூறாநிற்பர், அங்ஙனம் கூறுவது
மடமையேயாம் ; என்னை ?, அகை அழல் அழுவந்தன்னை -
எரிகின்ற தீப் பற்றிக்கொண்ட காட்டினை ; நெய்யினால்
அவிக்கலாமோ - நெய் பெய்து அவித்தல் சாலுமோ? என்பதாம்.

     (வி - ம்.) அவாவினை நுகர்ந்து அவித்தல் கூடும் என்று
சிலர் கூறுகின்றனர். இவர் கூற்று நெய்யினால் எரி நுதுப்பேம் என்பார்
கூற்றுப்போலப் பேதைமையுடைத் தென்றவாறு.

     “என்பினை நரம்பிற் பின்னி உதிரந்தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறந் தோலைப் போர்த்து மயி்ர் புறம் பொலிய வேய்ந்திட்டு,
ஒன்பது வாயிலாக்கி ஊன்பயில் குரம்பை” என இவ்வுடம்பினியல்பினை
உள்ள படியே உணராமல் காமத்தான் மதிமயங்கி வகை எழிற்றோள்கள்
என்றும், மணிநிறக் குஞ்சி என்றும் புகழ்எழ விகற்பிக்கின்ற என்றாள்.
இங்ஙனம் விகற்பித்தற்குக் காமமே காரணமாகலின் விகற்பிக்கின்ற
காமம் என்றாள்; காமம் - காமவின்பம். காதல் - காமக் கிளர்ச்சி.
அகைதல் - எரிதல். அழுவம் - காடு.

     அவிக்கலாமோ என்னும் வினா அவிக்கவொண்ணாது என்னும்
அதன் எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது. காமத்தை
நுகர்ச்சியால் அவித்தல் கூடாது. நுகர்தற்குரிய பொருள்களின்
பொல்லாங்கினை இடையறாது நினைந்து காணுமாற்றால் அவற்றின்
இழிதகவுணரின் அவற்றின்பாற் செல்லும் அவா அறும் என்பது
பௌத்தர் கொள்கை. இதனை, அசுபபாவனை என்பர். அஃதாமாறு :--
துறவியானவன் உடம்பானது பலவகை இழிந்த பொருளால்
ஆக்கப்பட்டதென்றும், சாணியின் குவியலில் தோன்றி வளரும்
புழுக்கள்போல் கருப்பையிலுண்டாகின்றதென்றும், மலங்கழிக்குமிடம்
போல் வாலாமையின் உறைவிடமாயிருப்பதென்றும், அருவருப்பான
அழுக்கின் கசிவுகள் இதன்கண் அமைந்த ஒன்பது வாயிலினும்
இடையறாது பெருகுகின்றன என்றும். அங்கணம் போலே
வெறுத்தற்குரிய தீ நாற்றத்தையே வெளிப்படுத்துகின்றது என்றும்
மறவாது நினைத்திருத்தல் என்ப. இவ்வாறு, இவ்வுடம்பின்
இழிதகவினை நினைவூட்டுமிடங்கள் மணிமேகலையிற்
பலவிடங்களினும் காணப்படுதலும் நினைக.

     இனி இவ்வுடம்பின் அகவை நாளும் மிகமிகக் குறுகியது என்று
நினைதலும் இதன்பாற்படும் என்க.

       “அநித்தம் துக்கம் அநான்மா அசுகியெனத்
        தனித்துப் பார்த்துப் பற்றறுத் திடுதல்”
                                 --மணி, 20 : 254 - 55
என்பதும்து.                                        (5)