திரு.பொ.வே.சோமசுந்தரனார் உரை

   யாக்கை நிலையாமை
7. போதர வுயிர்த்த வாவி
   புகவுயிர்க் கின்ற தேனு
மூதிய மென்று கொள்வ
   ருணர்வினான் மிக்க நீரா
ராதலா லழிதன் மாலைப்
   பொருள்களுக் கழிதல் வேண்டா
காதலா னழுது மென்பார்
   கண்ணனி களைய லுற்றார்.

     (இ - ள்.) போதர உயிர்த்த ஆவி - உடம்பினின்றும்
வெளியேறுவதற்கு விடுகின்ற மூச்சானது; புக உயிர்க்கின்ற தேனும் -
மீண்டும் காற்று உட்புகுதற் பொருட்டே விடப்படுகின்ற தாயினும்;
உணர்வினான் மிக்க நீரார் ஊதியம் என்று கொள்வர் - அங்ஙனம்
அக்காற்று மீண்டும் உட்புகுவதனை மெய்யுணர்வினின் மிக்க
பெரியோர் ஒரு பேறாகவே கருதாநிற்பர்; ஆதலால் அழிதன்மாலைப்
பொருள்களுக்கு அழிதல் வேண்டா - அங்ஙனமாதலால்
அழியுமியல்புடைய உடம்பு முதலியவற்றின் அழிவிற்கு நெஞ்சழிந்து
வருந்துதல் வேண்டா; காதலால் அழுதும் என்பார் - இவ்வுடம்பின்
கண் பற்றுடைமையாலே அதன் அழிவிற்கு ஆற்றாது அழுவேம்
என்று கருதுபவர், கண் நனி களையல் உற்றார் - தம் கண்களை
வாளா வருத்துபவரே யாவர் என்பதாம்.

     (வி - ம்.) வெளியேறிய மூச்சு மீண்டும் உட்புகாமற் போயே
விடுதலும் கூடும். ஆதலால் மெய்யுணர்வுடையோர் தாம் உள்வாங்கும்
ஒவ்வொரு மூச்சும் தமக்கு ஊதியமாகவே கருதுகின்றனர். அத்துனை
நிலையாமையுடையது இவ்வுடம்பு. இதன் அழிவுக்கு வருந்துதல்
வேண்டா. இதன் அழிவு கருதி அழுபவர் வீணே தம்மை
வருத்துபவரேயாவர் என்றவாறு.

     சான்றோர் உயிர்க்கும் மூச்சு மீண்டும் உட்புகுவதனை
ஊதியமாகக் கருதற்குக் காரணம் பின்னும் பிழைத்திருந்து அதனாலாய
பயன் கோடல் கருதியேயாம். பின்னும் வாழ்வேம் என்னும்
அவாவாலன்று என்க.

     இனி இச்செய்யுளோடு,

         
“நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
          புல்லறி வாண்மை கடை”          --குறள், 331

எனவும்,


         “நெருந லுளனொருவ னின்றில்லை யென்னும்
          பெருமை யுடைத்திவ் வுலகு”       --குறள், 339

எனவும்,

         “குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
          யுடம்பொ டுயிரிடை நட்பு”        --குறள், 338

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களும்,

 
“சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தி னாகும்
  ஆதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
  நோதலும் பரிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே
  பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்”


எனவும்,

 “பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள்
  சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடு்கடல் வெள்ள மாற்றா
  முரிந்தநம் பிறவி மேனாண் முற்றிழை யின்னு நோக்காய்
  பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு கண்டாய்”

எனவும்,


  
“அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
   என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
   துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
   இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்”


எனவும்,

 
“மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங்
  கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற்
  கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார்
  செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார்”

எனவும்,

     “இளமையின் மூப்புஞ் செல்வத்
          திடும்பையும் புணர்ச்சிப் போதிற்
      கிளைநரிற் பிரிவு நோயில்
          காலத்து நோயு நோக்கி
      விளைமதுக் கமழுங் கோதை
          வேலினும் வெய்ய கண்ணாய்
      களைதுய ரவலம் வேண்டா
          கண்ணிமைப் பளவு மென்றாள்”

எனவும் வரும் சீவக சிந்தாமணிச் செய்யுள்களும் ஒப்பு
நோக்கியின்புறுக.

            
 
 “நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
   நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்--நீரில்

   எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
   வழுத்தாத தெம்பிரான் மன்று”     --நீதிநெறி விளக்கம், 1

என்பது குமரகுருபரவடிகளார் திருமொழி.                (7)