|
கூற்றுவன்
கொடுமை |
8. |
அரவின மரக்க ராளி
யவைகளுஞ் சிறிது தம்மை
மருவினாற் றீய வாகா
வரம்பில்கா லத்து ளென்றும்
பிரிவில மாகித் தன்சொற்
பேணியே யொழுகு நங்கட்
கொருபொழு திரங்க மாட்டாக்
கூற்றின்யா ருய்து மென்பார்.
|
(இ
- ள்.) அரவு இனம் - கொடிய நச்சுப் பாம்பினங்களும்;
அரக்கர் - இரக்கமென்றொரு பொருளிலாத அரக்கரும்; ஆளி -
யாளி முதலிய வல்விலங்குகளும்; சிறிது தம்மை மருவினால் தீய
ஆகா - சிறிதுகாலம் தம்மோடு யாரும் பழகுமிடத்தே அவர்பால்
அன்புடையவாய்த் தீமை செய்வன ஆகாவாம்; வரம்பு இல் காலத்துள்
என்றும் - எல்லையில்லாததாய் இறந்தகாலத்திலெல்லாம் நாள்தோறும்;
பிரிவு இலம் ஆகி - தன்னோடு பிரிதலிலமாய்; தன்சொற்பேணி
ஒழுகும் நங்கட்கு - தன் கட்டளையை மேற்கொண்டு ஒழுகி வருகின்ற
மாந்தராகிய நம்பொருட்டு; ஒருபொழுது இரங்கமாட்டா - ஒருசிறிது
பொழுதேனும் இரங்கு மியல்பில்லாத, கூற்றின் - கூற்றுவனுக்குத் தப்பி;
உய்தும் என்பார் - யாங்கள் உய்ந்திருக்கவல்லேம் என்று கூறவல்லார்;
யார் - யாவரேயுளர்; ஒருவருமிலர் என்பதாம்.
(வி
- ம்.) அரவினம்
அரக்கர் ஆளி எனத் திணை விரவி
வந்தது, மிகுதிபற்றி அஃறிணை முடிபேற்றது.
அரவினம் முதலியன
கொல்லும் தொழிலினையுடையன வாயினும்
தம்மோடு சிறிதுகாலம் பழகுவோர்பால் அன்புகொண்டு அவரைக்
கொல்லாமல் விடுதலுமுண்டு. கூற்றுவனோடு யாம் எல்லையற்ற
காலமெல்லாம் கூடியிருப்போமாயினும் அவன் நம்பால் சிறிதும்
இரக்கம் கொள்வானலன். ஆதலால் அவனுக்குத் தப்பி
உயிர்வாழ்வோர் யாருமிலர் என்றவாறு.
கூற்றுவன் கணம்
கணமாக நம்மகவை நாளை
நம்மோடிருந்துண்கின்றான் ஆதலால், வரம்பில் காலத்துள் என்றும்
பிரிவிலமாகி என்றார். அவன் சொற் பேணுதலாவது, அவன்
கட்டளைப்படி கணந்தோறு மிறந்திறந்து வருதல். சிறிதேனும்
இரங்குதலிலன் என்பாள். ஒருபொழுது இரங்கமாட்டாக்கூற்று என்றாள்.
உய்துமென்பார் யார்? என்னும் வினா ஒருவருமிலர் என்பது பட
நின்றது. இனி இதனோடு,
தவத்துறை
மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தொழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
வழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ
எனவரும்
மணிமேகலைப் பகுதியும்,
கூற்றுவன் கொடிய னாகிக் கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
மாற்றரும் வலையை வைத்தான் வைத்ததை யறிந்து நாமும்
நோற்றவன் வலையை நீங்கி நுகர்ச்சியி லுலக நோக்கி
ஆற்றுறப் போத றேற்றா மளியமோஒ பெரிய மேகாண்
எனவரும் சிந்தாமணிச் செய்யுளும், ஒப்பு நோக்குக. (8)
|