|
இதுவுமது
|
9. |
பாளையாந்
தன்மை செத்தும்
பாலனாந் தன்மை செத்தும்
காளையாந் தன்மை செத்துங்
காமுறு மிளமை செத்தும்
மீளுமிவ் வியல்பு மின்னே
மேல்வரு மூப்பு மாகி
நாளுநாட் சாகின் றாமா
னமக்குநா மழாத தென்னோ. |
(இ
- ள்.) பாளை ஆம் தன்மை செத்தும் - யாம் நம்முடைய
உடம்பு நந் தாய்மாரின் வயிற்றின்கண் கருவாகியிருந்த
நிலைமையிலிருந்து இறந்தும்; பாலன் ஆம் தன்மை செத்தும்
- பின்னர் எய்திய குழவிப் பருவம் இறந்தும்; காளை ஆம் தன்மை
செத்தும் - அப்பருவத்தின் பின் வந்தெய்திய காளைப்பருவம்
இறந்தும்; காமுறும் இளமை செத்தும் - அதன்பின்னர் வந்ததும்
காமுற்று மகளிரை மருவுதற் கியன்றதும் ஆகிய இளமைப் பருவமும்
இறந்தும் வந்துள்ளோம்; மீளும் இவ்வியல்பும் - இவ்வாறு மீண்டு
மீண்டும் இறக்கின்ற இந்த இயல்பினையே; இன்னே மேல்வரும்
மூப்பும் ஆகி - இப்பொழுதே இதற்கு மேலே வருகின்ற முதுமைப்
பருவமும் எய்தாநிற்ப; நாளும் நாள் சாகின்றாமால் - இவ்வாறே யாம்
ஒவ்வொரு நாளும் இறப்பினை எய்துகின்றோ மல்லமோ?; நமக்கு நாம்
அழாதது என்னோ? - பிறர் சாகின்றதற்கு அழுகின்ற யாம் நமது
சாவிற்கு நாமே அழாததற்குக் காரணந் தான் என்னையோ? என்பதாம்.
(வி
- ம்.) யாம் நஞ்சுற்றத்தார் இறந்துழிக் கண்கனிந்து
அழுகின்றோம்; ஆனால் யாமோ யாம் கருவிருந்த பருவத்தினின்றும்
இறந்தோம். பின்வந்த குழவிப் பருவத்தினின்று மிறந்தொழிந்தோம்.
அதன்பின் வந்த காளைப் பருவத்தினின்றும் இறந்தோம்.
அதன்பின்னர் மகளிரைக் காமுற்றுக் களிக்குமத்
தனியிளம்பருவத்தினின்றும் இறந்தொழிந்தோம். இப்போது
வந்தெய்துகின்ற இம் மூப்புப் பருவத்தினின்றும் இறத்தல் ஒருதலை.
இவ்வாறு நாள்தோறு மிறக்கின்ற நாம் நமது இறப்பிற்கு அழாமைக்குக்
காரணம் யாதோ? என்றவாறு, (9)
|