9. வேத வாதச் சருக்கம்
                 

 

824.

  நீலகேசி பூதிகனை வினவுதலும்
      அவன் விடையும்

அணிநா டிவைதா மறல்யா றிவைதாம்
பிணிநா டிவைதாம் பெருங்கா டிவைதாம்
மணிமா மலைதா மெனவே வருவாள்
அணியார் சுகதன் நகரெய் தினளே.

(இனி ஐந்து செய்யுள் கலிபுர வருணனை)

825.

அறையும் கடலும் அரவக் குரலும்
பறையின்  னொலியும் படுகண் டிகையுஞ்
சிறையின் மிகுமா லிதுசெம் படர்கள்
இறைவன் னுறையு மிடமா மெனலும்.

 

826.

மழைசேர் நகரம் மலைபோன் றனவே
கழைசேர் கொடியுங் கதலிவ் வனமே
விழைதா ரவரும் விரிகோ தையரும்
முழைவாழ் புலியே மயிலே மொழியின்.

 

827.

நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங்
கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும்
படுவண் டறையும் பொழிலும் மெழிலார்
மடுவுந் திடரும் மணல்வார் புறவும்.

 

828.

கயன்மீ னிரியக் கழுநீர் விரியும்
வயன்மாண் புடைய வளமைத் தனெவும்
முயன்மீ னெறியு முறியுங் கறியா
தயன்மே யுறையா தணியிற் றெனவும்.

 

829.

கழுகின் னினமும் கழுதின் னினமும்
முழுதும் மறுவை பலமூ டினரும்
கொழுதின் னிணனும் பிணனுங் குலவி
இழுதென் னெலும்பா ரிடுகா டெனவும்.

           வேறு
       நீலகேசி கூற்று

830.

சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர
மோதியே வைத்தாரவ் வோத்தலொ மீக்கிடந்த
வீதியே காணலா மென்றாளா னின்றாரும்
போதியா ரீண்டைப் புலால்பழியா ரென்றலும்.

நீலகேசி அம்மக்களை நோக்கிக் கூறியது

831.

அங்காடிப் பண்டவூன்
    றின்ன வறமுரைத்தார்க்
கிங்காடி வாழ்வனவு
    மூனாய்வந் தீண்டியவாற்
கொங்காடத் தேனறையுங்
    கொய்ம்மருதம் பூவணிந்த
பொங்காடை போர்த்தார்க்குப்
    பொல்லாதே யென்னீரோ.
 

 

832.

விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி
வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன
கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத்
தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.

              இதுவுமது

833.

தன்றார மீந்தான் றனக்குறுதி யாவதனை
யொன்றானும் வேண்டான் பிறர்க்கே யுழந்தானூன்
தின்றானுந் தீவினையைச் சேருமெனச் சொன்னாற்
பொன்றாவாய்ப் பல்விலங்கும் பூமிமேல் வாழாவோ.

               இதுவுமது

834.

உரிதா வுணர்ந்தானொன் றோரா துரையான்
பரிவே யிதுவுந்தன் பாலரோ டெல்லா
மெரிதோய் நரகம்பா ழேற்றுவா னேயாம்
பெரிதா மளியன் பெருந்தகைய னேகாண்.

               இதுவுமது

835.

கொடைககொட்டி விற்பானுங் கொள்வானு மன்றி
யிடைச்செட்டி னாற்பொருளை யெய்துவான் போல
முடைக்கொட்டி முத்துரைத்து மூடிக்கொண் டேகுங்
குடைச்சிட்ட னாருயிர்க்கோர் கூற்றமே கண்டீர்.

               இதுவுமது

836.

ஆடுவார் காண்பா ரவரருகே தான்சென்று
தோடுவார்ந் தாலொப்பச் சொல்விரிப்பான் போற்பாவம்
கூடுவார் கூடாதார் கொன்றார்தின் றாரென்னும்
சேடனார்க் காண்டுநா மென்றுதான் சென்றாளே..

                வேறு

837.

அணிசெய் கோழரை யரைநிழ லழகனைப் பொருந்தி
மணிக டாம்பல கதிர்விடு மலருடை மணைமேற்
றுணிவு தோற்றினை யெனச்சிலர் துதியொடு தொழுது
பணிய யாதுமோர் பரிவிலன் படம்புதைத் திருந்தான

 

838.

ஆத்த னேயெனத் தெளிந்தவ ணமர்ந்திருந் தவர்க்குச்
சூத்தி ரம்மிது வினையமு மிதுவிது பிறிதாஞ்
சாத்தி ரம்மிவை மூன்றென வன்றவத் தோன்றல்
பாத்து ரைக்குந்தன் பதப்பொருள் பலவகைப் படவே.

 

839.

கந்த மைந்திவை கணிகத்த வாமெனக் கரைந்து
முந்தி நாடினோ ருணரவல்ல தில்லையென் றுரைத்தும்
புந்தி யாலங்கோர் புற்கல னுளனெனப் புணர்த்து
மந்தி லாற்சொலாப் பாட்டினோ டியாதுமில் லெனவும்.

 

840.

நண்பரை நுதலியும் பகைவரை
    நுதலியு மமிர்தொடுநஞ்
சுண்பவர்க் கல்லதற் கவர்களுக்
    காமென வுரைக்குநர்யார்
பண்பிலி தேவரை நுதலிய
    கொலையினிற் பல்வினைதா
னுண்பல வகையினி னடைந்தவை
    விளையுங்க ணுமக்குமென்றாள்.

        இதுவுமது

841.

கொன்றவர்க் கல்லது நதலப்பட்
    டார்களைக் கூடலவேற்
றின்றவர்க் கியாவையுந் தீவினை
    சேரல தேவர்க்குப்போ
லென்றுரைப் பாய்க்கெய்து மேழைமை
    யுண்குவ வேலிமையார்க்
கொன்றுவி யேனல னோவினை
    யூன்றின்பவர்க் கொப்பவென்றாள்.

கொல்லாமை மேற் கொண்டும் வேள்வி
     செய்தல் கூடும் எனல்

842.

ஈகளு நாய்களுங் கொன்றவ
    ரீவகண் டின்புறலிற்
றீயவை யேசெய்யுந் தேவரத்
    தீவினை தீர்க்கிற்பவோ
நோய்களும் பேய்களு மொழிக்குவ
    மெனினவை நுங்களுக்கு
மாய்விடி னுணரினஃ தாம்வினை
    யகற்றுதற் கரியதென்றாள்.

       இதுவுமது

843.

நம்முறு துன்பங்க ணாமொழிக்
    கல்லலம் பிறருறுப
வெம்முறை யாயினும் போக்குதற்
    கரியவிங் கிவர்களைப்போற்
றம்முறு துன்பமும் தாமொழிக்
    கில்லலர் பிறர்களையே
லெம்முறை நோய்களுஞ் செய்குப
    வவரென விகழ்ந்தனளே.

ஊன் உவக்கும் தேவர் பெருமையுடையோராகார் 
              எனல்

844.

நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினை
    நலிவதோர் பசியினரேற்
றாங்கொன்று தின்குவ ராய்விடி
    னவர்களைத் தவிர்க்குநர்யார்
தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்
    மூணினைச் சேணின்றுதாம்
வாங்குத லல்லது முடையொடு
    சோறுண்ணும் வயிற்றினரே.

பூதிகன் மாணாக்கர் அவனை வினவுதலும் 
        அவன் விடையும்

845.

பொய்த்துரை யாநன்மை போதுவ
    தேலில்லை பூதிகனே
சத்திய மேயுரை நீயெனத்
    தானுமஃ தேயுரைத்தா
னெத்திசை யார்களு மேத்துதற்
    கேற்றன னிவனுமென்றார்
தத்துவ ரேநின்று தத்துவ
    ரெனப்படுந் தன்மையினார்.

நீலகேசி அந்நகரினின்றும் செல்லுதல்

846.

நன்பொரு ளாவன விவையென
    வவனோடு நகரத்துள்ளா
ரின்புறும் வகையினி னெடுத்தன
    ளுரைத்தபின் விடுக்கலுற்றாட்
கன்புபட் டவர்களு மறநெறி
    யறிவித்த வார்வத்தினாற்
பின்புசென் றொழிதுமென் றதுசெய்து
    வலங்கொண்டு பெயர்ந்தனரே.