10. பூத வாதச் சருக்கம்

854.

வேத வாதம் வெளிறுசெய் தாளங்கோர்
பூத வாதியும் பொங்கினன் மேற்செல
வாத வாதி யிவனை யடக்கினா
லேத வூதிய மில்லென வெண்ணித்தான்.

நீலகேசி பூதவாதியை வினவுதல்

855.

நில்லப் பாவினி நீகண்ட தத்துவஞ்
சொல்லற் பாலையிங் கென்னலுஞ் சொல்லுவான்
மல்லற் றானை மதனசித் தன்னெனுங்
கல்லொத் தோங்கிய தோட்களி யானையான்.

பிசாசகன் கூற்று

856.

அணிகொ ளாரத் தரசவை கேட்கெனப்
பிணிகொள் மூஞ்சிப் பிசாசகன் சொல்லுவான்
குணிகு ணம்மெனுங் கூற்றில னாலதென்
றுணிவைம் பூதங்க ளேதொழில் சொல்லுவேன்.

பொறிபுலன்களின் தோற்றம்

857.

திண்ணென் றீநில நீர்வளி காயத்தாற்
கண்ணு மூக்கொடு நாமெய் செவிகளாய்
வண்ண நாற்றஞ் சுவையினொ டூறொலி
யெண்ணுங் காலை யியைந்துழி யெய்துமே.

அறிவு இன்பம் முதலியவற்றின்
தோற்றமும் மறைவும்

858.

ஐந்துங் கூடிய றிவின்ப மாதியாய்
வந்து தோன்றி மதுமயக் காற்றலி
னந்தி நாளுங் குடஞ்சுடர் நாட்டம்போற்
சிந்தி னாலவை சென்றினஞ் சேருமே.

உயிர் என்பது பொய்யெனல்

859.

உலகெ லாமவை யேயுயி ருண்டெனச்
சொலவ லாரன சொற்றெளிந் தேநின்று
பலக லாங்களுஞ் செய்வ பயனிலார்
புலவ ராவதன் றோவங்குப் போந்ததே.

இதுவுமது

860.

சென்ற காலத்துஞ் செல்கின்ற காலத்து
நின்ற காலத்தி லும்மிந் நிகழ்ச்சியே
யென்று மிவ்வுல கித்தன்மைத் தேயிது
வன்ற தென்றுரைப் பாரயர்ப் பார்களே.

நீலகேசி பூதவாதி கூற்றை அவையோர்
முன் வழிமொழிந்து கோடல்

861.

இட்ட மாவ திதுவெனக் கேட்டவள்
சிட்ட ரன்றியுஞ் சென்றிருந் தார்க்கெலா
மொட்டி மீட்டு முரைத்துளந் தான்கொளீஇக்
கட்டு ரைய்யெடுத் தாள்கயற் கண்ணினாள்.

நீலகேசி பூதவாதியை நோக்கி நீ
நல்லாசிரியனல்லை எனல்

862.

வினையி னீங்கி விளங்கிய ஞானத்தோர்
முனைவ னின்மையி னான்முத னூலில்லை
யனைய மாண்பின தாகம மாதலாற்
புனைவ னின்னுரை பொய்யெனச் சொல்லியே.

இதுவுமது

863.

கவைத்த கோலொடு கட்டில் கடிஞைகாத்
தவத்திற் கொத்தன தாங்கினித் தாபதம்
அவத்த மேபிற வாருயி ரில்லையேற்
சுதத்தி னாலுய்த்தல் சூதது வாகுமே.

இல்லாதனவற்றை இல்லையென்று கூறல்
பயனில் செயல் எனல்

864.

பூத மல்லது பொய்பிற நூலென்று
வாதஞ் செய்து வருந்தி முடிப்பதென்
நாத னன்னெறி நல்வினை நற்பயன்
யாது மில்லை யெனினஃ தவத்தமே.

இதுவுமது

865.

யாது மில்லை யுயிரிவை யாஞ்சொல்லும்
பூத மேயெனப் போந்திருந் தென்னொடு
வாதஞ் செய்கின்ற பூதமவ் வாதமோ
யாதைம் பூதங்க டம்முள்ளு மஃதினி.

இதுவுமது

866.

அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான்
களித்தற் காற்ற லுடையன காட்டினாய்
களித்தற் காரண காரிய மூர்த்தியா
லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.

இதுவுமது

867.

உருவின் காரிய மேலுரு வென்றுண
ரருவின் காரிய மேலவா காயக்கா
மொருவன் காரிய மன்றுணர் வென்கின்றாய்
மருவுங் காரண காரிய மற்றெனோ.

இதுவுமது

868.

வையு மண்ணு மயிரு மலமுமோர்
பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ
பொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம்
செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.

இதுவுமது

869.

கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும்
வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா
லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக்
கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.

இதுவுமது

870.

பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய
வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ
பிறிதொன் றோபொருட் பெற்றிமற் றின்றெனக்
குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.

இதுவுமது

871.

ஒன்றன் காரிய மொன்றென வொட்டினுஞ்
சென்றெ லாமவை சேதனை யாகுமே
யன்லெ லாமவை யாக்குமொன் றேயினி
யென்ற லானுமஃ தின்னுயி ரெய்துமே.

இதுவுமது

872.

அனைத்துப் பூதமு மேயறி வாக்கினான்
மனத்துக் கின்னுமோர் பூதத்தை மன்னுநீ
நினைத்துக் காணன்றி நேடியுங் காணையா
வெனக்கு நீசெய்வ தித்துணை யேயினி.

இதுவுமது

873.

பிண்ட மாகிப் பிறந்தன யாவையும்
உண்டுங் கண்டு முணர்ந்தவுஞ் செய்தவுங்
கொண்டு மீட்டவை கூறுதல் கூறுங்கால்
கண்ட பூதத்துக் காரிய மென்றியோ.

இதுவுமது

874.

பிறந்த நாள்களுட் பிள்ளையு மல்லவு
மறிந்து தாய்முலை யோடல்ல வுண்டிக
ளறிந்த வாறென்கொ லோவைந்து பூதமுஞ்
செறிந்த நாள்களுட் செய்வன வல்லவால்.

இதுவுமது

875.

புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்
பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு
மொத்த தன்மைய பன்மைய குட்டிகள்
வித்தி னாய வினைவிகற் பாம்பிற.

இரண்டறி வுயிர்கள் முதலியன

875.

புத்தி யானின்றிப் பூதத்தி னாயவேற்
பத்து மல்லவும் பன்றிக்கு நாய்கட்கு
மொத்த தன்மைய பன்மைய குட்டிகள்
வித்தி னாய வினைவிகற் பாம்பிற.

இரண்டறி வுயிர்கள் முதலியன

876.

குறைந்து பூதங்கள் கூட்டமுண் டாமவ
ணுறைந்த பூதத் துணர்வல்ல தின்மையா
லறைந்த பூதங்க ளைந்துமங் கில்லெனின்
மறைந்த பூதத்தி லுண்மைவந் தெய்துமால்.

நீலகேசி இரண்டறிவுயி ருடம்பினும்
ஐம்பூத முண்மை காட்டுதல்

877.

நீருங் காற்றுமல் லானில மில்லையோ
வூருஞ் சங்கினோ டூர்மச்சி மூக்கில
தேரி யுண்டலிற் றீயுமுண் டில்லைகண்
காரி யஞ்செவி காணலங் காயக்கென்.

இதுவுமது

878.

ஒன்றொன் றாக வுணர்ச்சி முறைமையாற்
சென்று பூதங்கள் சேர்வதற் கேதுவென்
குன்றித் தத்தமுள் யாவையுங் கூடுமே
னின்ற மெய்ம்மை நினதென நேர்வல்யான்.

இதுவுமது

879.

ஐந்து பூத மவற்றவற் றாலைந்து
மிந்தி யங்க ளியையு மிவையெனுஞ்
சிந்த னையொழி நீயெனச் செப்பினா
ளுய்ந்து வாழு முயிருண்மை யொட்டினாள்.

இதுவுமது

880.

உணர்வு மின்பமு மோரறி வாதிக்கட்
புணரு மேயெனிற் பொய்தொகைக் கண்ணென
லுணர்வு மின்பமு முள்வழி யேயுயிர்
புணரு மென்றனள் போதன கண்ணினாள்.

இதுவுமது

881.

காற்றி னாலுடம் பாமெனிற் காற்றினே
தோற்றி னாலுயிர் தான்றொகை யென்செயு
மாற்றிவ் வைந்தினு மாருயி ராமெனு
மாற்ற மாயின் மனங்கொளற் பாலதே.

இதுவுமது

882.

வேறு வேறைந்து பூதமு மெய்ம்மையா
லீறுந் தோற்றமு மில்லுயி ராயின
பாறி யாவையும் பாழ்த்தொழி யும்மெனக்
கூறி னாயது குற்ற முடைத்தரோ.

உயிர் நித்தியப் பொருளெனல்

883.

குழவிக் காலத்துக் கூறின யாவையுங்
கிழவுக் காலத்துக் கண்ணவை கேட்டலா
லிழவெக் காலு மிலானினி யார்களைத்
தொழுவிப் பானங்கோர் தோன்றலுந் தோன்றுமே.

துன்பமுதலியவற்றின் வேறுபாட்டிற்குக்
காரணம் யாதெனல்

884.

துன்பந் தூய்மையுந் துட்கென வுட்கலும்
அன்பு மானமு மாயமு மாண்மையு
மின்பு மென்றிவை யாக்கிய தீதென
முன்பு நின்று முறுக்கவும் வல்லையோ.

இதுவுமது

885.

கனவு மந்திரம் சிந்தனை வாழுநாள்
வினவு சோதிடங் கேட்டுரை புட்குரல்
அனகள் யாவையு மென்னைநின் பூதங்க
ளனகொ னீயிங் கறிந்தனை சொல்லென.

இதுவுமது

886.

வைத்த வத்து மறுபிறப் பிற்றமர்க்
குய்த்துக் காட்டுத லேலுல கொட்டுமா
லெத்தி றத்தினு மில்லுயி ரென்றிநீ
செத்து வம்மெய்திற் சில்லைமை
செய்பவால்.

இதுவுமது

887.

பேயு மில்லை பிறப்பது மில்லென்பாய்
வாயுங் கிள்ளிப் புடைப்ப வருவதென்
மாயத் தாலன்றி மந்திரத் தாற்றெய்வங்
கூயக் காலறங் கோடலை யொட்டென.

பூதவாதி நீலகேசி கூறியதனை ஏற்றுக்கோடல்

888.

ஒட்டி னேனென் றுரைப்ப வுணர்விலா
முட்டை காண்கென முன்கை முறுக்கியே
சுட்டி னாளங்குத் தோற்றமு நோக்கென
விட்டுந் தான்றன் விகுர்வணை காட்டுவாள்.

நீலகேசியின் அருளுடைமை

889.

கழுதுங் காணல ராகிக் கலங்கியே
யழுதுஞ் சாப வகலிடத் தாரிவன்
முழுதுங் காணின் முடியு மெனமுன்னி
வழுவில் வாயும் வளைபல்லுந் தோற்றலும்.

பேயின் வாய்கண்ட பூதவாதியின் நிலைமை

890.

கண் புதைத்துக் கவிழ்ந்தனன் வீழவே
திண் பதத்திற் றெருட்டி யெடுத்திரீஇப்
பண்பு தக்கன சொல்லிப் பரியனின்
நண்ப தென்று நடுக்கமுந் தீர்த்தபின்.

நீலகேசி பூதவாதியை வினவலும்
அவன் விடையும் பிறவும்

891.

பேய்கண் டாயதன் பெற்றி யுரையென
வாய்கண் டேனென்னை வாழ்க்கை வலியன்மின்
நோய்கொண் டேனென வஞ்ச னுனக்கவ
டாய்கண் டாயென்றுஞ் சாதலில் லையென.

பூதவாதிக்கு அந்தப் பேய் தாய்
என்றதற்குக் காரணங்கூறல்

892.

பெற்ற பேரும் பிசாசிக னென்பதே
யற்ற மின்றி யவட்கு மகனைநீ
குற்ற மில்லறங் கொள்ளின்மற் றெம்மொடு
சுற்ற மாதலிற் சொல்லெனச் சொல்லுவான்.

பிசாசின் கூற்று

893.

பிறப்பும் பேயு முதலாப் பிறகளுந்
திறத்தி னீசொன்ன யாவையுந் தேறிநின்
றறத்தை யானு மமைவரக் கொண்டனென்
மறக்க லேனினி மன்னுமை யானென.

894.

பேந்தரு தோற்றப் பிசாசிக னிற்றென
வேந்துமவ் வேத்தவை யாரும் வியப்பெய்தி
யாய்ந்த கேள்வியி னாளை யையா யென
மாந்தர் யாரு மதித்தன ரென்பவே.