பக்கம் எண் :

பக்கம் எண்:1

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
            ..........................பொருள்புரி நூலும்
          அலகை சான்ற வுலக புராணமும்
          பலவகை மரபிற் பாசண் டியர்கள்
          சலசல மிழற்றுஞ் சமய விகற்பமும்
     5    இசையொடு சிவணிய யாழி னூலும்
          நாடகப் பொருளும்....................
          உப்பாற் பொருளு முட்கொண் டடக்கி
          உளப்பா டுடைமை யுதயண னுரைத்தலும்
 
        (பிரச்சோதனனை நோக்கி உதயணன் கூறல்)
           1 - 8: பொருள்புரி..........உரைத்தலும்
 
(பொழிப்புரை) அறம் பொருள் இன்பம் என்னும் உறுதிப் பொருள் மூன்றனுள் வைத்து நடுவணதாகிய பொருளை நிரம்ப ஈட்டுதற்கியன்ற நூலினையும், கால முதலியவற்றின் அளவைக் கணித்துக் கூறுதல் அமைந்த உலக வரலாற்று நூலும் பல்வேறு வகைப்பட்ட முறைமையினையுடைய பாசண்டியர்கள் ''சலசல'' என்று கேட்போர் மயங்கும்படி கூறாநின்ற சமய விகற்ப நூல்களும், இசையொடு பொருந்திய யாழிலக்கண நூலும், கூத்தின் வகைகளை விளக்கும்...........இவையிற்றிற் கூறப்படாத பிற பொருள்களை நுதலிய பல்வேறு வகைப்பட்ட நூல்களையும், நன்கு பயின்று அகத்திலே அடக்கிக்கொண்டுள்ளதொரு, நெஞ்சத்தினைத் தான் உடையனாதலை அப்பிரச்சோதன மன்னன் உணர்ந்து கொள்ளும்படி உதயணகுமரன் அம்மன்னனோடு அளவளாவா நிற்ப என்க.
 
(விளக்கம்) பிரச்சோதனன் தன்னை வினவிய மொழிகட்கு விடை கூறுபவன் தன் மொழியாலே தன்னுடைய கற்று முதிர்ந்த உள்ளத்தின் தன்மை அம்மன்னனுக்கு விளங்குமாற்றானே வித்தகமாகச் சொல்லாட்டம் நிகழ்த்தினன் என்பது கருத்து. 'கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும், கொள்ளார் அறிவுடை யார்' என்பது பற்றி உதயணன் தனது ஒட்பமுடைமைக்குக் காரணமான தன் கலை நலமெலாந் தோன்றுமாறு அம்மன்னனொடு பேசினன் என்க. ஒருவனோடு தலைப்பெய்து சொல்லாடிய மாத்திரையானே இவன் பெருந்தகை அல்லது கயவன் என்றுணரப்படுதலின் உதயணன் தனது பெருந்தகைமை முழுதும் தோன்ற மன்னனோடு சொல்லாட்டம் நிகழ்த்தினன் என்பது கருத்து. பொருள்புரி நூலும் என்னும் இவ்வடிக்கு முன்புள்ள இக்காதைப் பகுதியும் இக்காதைக்கு முன்னுள்ள முப்பத்தொரு காதைகளும் காலக்கூற்றன் வாய்ப்பட்டொழிந்தன. பொருள்புரிநூலும் என்னுமிக் குறிப்பாலே இதன் முன்னர் அறம்புரி நூலும் என்னும் சொற்றொடர் இருந்திருக்கக் கூடும் என்று ஒருவாறு ஊகித்தல் மிகையன்றென்க. பொருள்புரிநூல் - பொருளை ஈட்டற்குக் காரணமான நூல் என்க. அஃதாவது பொருளை ஈட்டுதற்குத் துணைக் காரணமான அரசியல் நூல் என்க. அலகை - அளவு. புராணம் - வரலாற்று நூல். அஃதாவது உலகந் தோன்றிய வகையும் அதன் அகவை முதலியனவும் அதன் கூறுபாடுகளும் அதனை ஆளும் அரசர் வரலாறும் இன்னோரன்ன பிறவும் அடங்கிய நூல் என்க. பாசண்டியர் - மறை நூலை ஆதாரமாகக் கொள்ளாத புறச்சமயக் கணக்கர். இப்பாசண்டர் தொண்ணூற்றாறுவகைச்சமய சாத்திரத் தருக்கக் கோவையையுடையராகலின் 'பலவகை மரபிற் பாசண்டியர்கள்' என்றார். மேலும் இவர் தாமும் 'கலகல கூவுந் துணையல்லாற் கொண்டு தடுமாற்றம் போஒந்துணை யறியார்' என்பார் சலசல மிழற்றும் சமய விகற்பம் என்றார். யாழின் நூல் - யாழின் இலக்கணங்கூறும் நூல். இஃது இசை நூலாகலின் இசையொடு சிவணிய யாழ்நூல் என்றார். நாடகம் - கூத்து. இவ்வடியில் இறுதிச் சீர் இரண்டும் அழிந்தொழிந்தன. அச்சீர்களில் இயல்நூல் கூறப்பட்டிருக்கலாம் என்பது முன்னர் இசையும் கூத்தும் கூறப்பட்டமையாலுணரலாம். உப்பால் - இப்பால். உப்பாற் பொருள் என்றது ஈண்டுக் கூறப்பட்ட நூல்கள் நுதலிய பொருள்களிலடங்காத பிற பொருள் என்றவாறு. அடக்கி யுடைமை என்க. உளப்பாடு - உள்ளமுடைமை. அது தோன்ற உதயணன் மன்னனுக்கு உரைத்தலும் என்க. இதனால் தன்னை வினவிய மன்னனுக்கு உதயணன் கூறுகின்றான் என்பது