பக்கம் எண் :

பக்கம் எண்:175

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
38. விழா வாத்திரை
 
           விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை
          புரிந்துட னயரும் பொலிவின தாகி
          மல்லன் மூதூ ரெல்லாச் சேரியும்
          பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி
     5    இடிமுர செறிந்த வெழுச்சித் தாகி
          யாழுங் குழலு மியம்பிய மறுகின்
 
        (எழுச்சியார வாரம்)
         1 - 6 :  விரைந்தனர்.........மறுகின்
 
(பொழிப்புரை) இவ்வாறு உஞ்சை மாநகரத்தோர் விரைந்து மேற்கொண்ட விரிந்த நீராட்டு விழாவின் பொருட்டு அந் நகரத்தே மேற்கொண்ட யாத்திரையானது எல்லோரும் பெரிதும் விரும்பி ஒருங்கே செய்யுமொரு பொலிவினையுடையதாகி அவ் வளமுடைய உஞ்சை நகரத்தே யமைந்த எல்லாச் சேரிகளிடத்தும் முழங்காநின்ற சங்கு முழக்கத்தோடே கொம்புகளையும் உயர்த்தி ஊதி இடிபோன்று முரசத்தை முழக்கிய செலவினையுடையதாகப் புறப்பட்டுச் செல்வோர் வாசிக்கும் யாழும் குழலும் முதலிய இன்னிசைக் கருவிகள் முழங்காநின்ற வீதிதோறும் என்க.
 
(விளக்கம்) ஆத்திரை - யாத்திரை - புறப்பாடு. எல்லா மக்களும் ஒரே சமயத்திற் புறப்பட்டனர் என்பார் புரிந்து உடன் அயரும் பொலிவினதாகி என்றார். ஆத்திரை பொலிவினதாகி எழுச்சித்தாகி இயம்பிய மறுகின் என்க. பயிர்வளை - முழங்குஞ்சங்கு. வயிர் - ஊதுகொம்பு. வளையும் வயிரும் முரசமும் புறப்படுதற்கு அறிகுறியாக முழங்கின என்றும், புறப்பட்டுப் போவோர் யாழுங் குழலும் இயம்பிச் செல்லாநின்றனர் என்றும் கொள்க.