பக்கம் எண் :

பக்கம் எண்:212

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
39. புனற்பாற்பட்டது
 
         
          நம்பியர் கூடிய நாளவை மருங்கிற்
          கம்பலைப் பந்தர்க் காழகில் கழுமிய
          திருநா ளிருக்கைத் திறல்கெழு வேந்தன்
          பெருநீ ராட்டணி பெட்கும் பொழுதெனச்
     5    செம்பொற் படத்துப் பேறுவலித் திருந்த
          மங்கலக் கணிகண் மாதிர நோக்கிப்
          புரைமீன் கூடிய பொழுதியல் கூற
 
        1 - 7: நம்பியர்...........கூற
 
(பொழிப்புரை) உதயணகுமரனை உள்ளிட்ட நம்பியர் கூடியிருந்த திருவோலக்கத்தின்கண் மன்னனால் செம்பொன்னாடை போர்த்தப்பட்ட சிறப்புடையராய், இனிதிருந்த மங்கலநாள் அறிவிக்கும் கணி மாந்தர் வானிலையை ஆராய்ந்து உயர்ந்த விண்மீன் கூடாநின்ற முழுத்தத்தைக் கண்டு ஆரவாரமுடைய பந்தரின்கண் முதிர்ந்த அகிலினது நறும்புகை மணங் கமழா நின்ற திருவிழா விருப்பின்கண் இருந்த ஆற்றல் பொருந்திய நம்மரசர் பெருமான் பெரிய நீராட்டுவிழாவின் அழகினை விரும்புதற்குரிய நன்முழுத்தம் இஃதென்று கூறாநிற்றலானே என்க.
 
(விளக்கம்) நம்பியர் என்றது உதயணனையுள்ளிட்ட நகரப் பெருமக்களை. திருநாளின் பொருட்டு எழுந்தருளியிருக்கும் இருப்பு என்க. பெட்கும் - விரும்பும். செம்பொற் படத்துப்பேறு - பொன்னாடை போர்த்தப்பட்ட சிறப்பு. மாதிரம் - வானம். புரைமீன் - உச்சமடைந்த விண்மீன்.