பக்கம் எண் :

பக்கம் எண்:277

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
42. நங்கை நீராடியது
 
           நீராட் டரவ நெடுநகர் வரைப்பகம்
          ஆராட் டரவமொ டமர்ந்துவிழை வகற்றிய
          பெருநிலை நிதியம் பேணாது வழங்கி
          இருநில மடந்தைக் கிறைவ னாகிப்
     5    பெருஞ்சின மன்ன ரருஞ்சமம் வாட்டித்
          தம்மொழிக் கொளீஇ வெம்முரண் வென்றியொடு
          வழுவில் கொள்கை வானவ ரேத்தும்
          கழிபெருங் கடவுளை வழிபடி னல்லது
          வணக்க மில்லா வணித்தகு சென்னித்
     10    திருச்சே ரகலத்துப் பிரச்சோ தனன்மகள்
 
                (வாசவதத்தை)
             1 - 10: நீராட்டு..........மகள்
 
(பொழிப்புரை) நெடிய உஞ்சை மாநகரத்தின்கண் வாழ்வோர் இவ்வாறு நீராடலாலே தோன்றிய பலவேறு ஆரவாரத்தோடும், ஆராட்டோடும். தம்விருப்பத்தைப் போக்கிக்கோடற்குப்பொருந்திப் பெரிய நிலைமையையுடைய பொருள்களையும் பாதுகாவாமல் இரவலர்க்கு வழங்கா நிற்ப; இப்பால் பெரிய நிலமகளுக்குத் தலைவனாகிப் பெரிய சினமுடைய பகைமன்னரைச் செயற்கரிய போரினாலே வாடும்படி செய்து அவரெல்லாம் தனது ஆணையை மேற்கொள்ளும்படி செய்து வெவ்விய போர் வெற்றியோடு குற்றமில்லாத கோட்பாட்டினையுடைய தேவர்கள் வாழ்த்தா நின்ற மாபெருங்கடவுளை வழிபாடு செய்தற்கல்லது யாண்டும் வணங்குதலில்லாத முடியணி தக்கிருக்கின்ற தலையினையும் திருமகள் சேர்ந்திருக்கின்ற மார்பினையும் உடைய பிரச்சோதனன் என்னும் மன்னர் மன்னனுடைய மகளாகிய என்க.
 
(விளக்கம்) நகர்வரைப்பகம் - ஆகுபெயர். ஆராட்டு - விழாவின் இறுதியிலாடும் நீராட்டு. அகற்றிய - செய்யிய என்னும் வாய்பாட்டெச்சம், வழங்க என்க. ஆகி வாட்டிக் கொளீஇ வணக்கமில்லாச் சென்னியையும், அகலத்தையும், உடைய பிரச்சோதனன் என்க. சமம் - போர். தம்மொழி என்றது, அவன் முன்னோரையும் உளப் படுத்தியபடியாம்.