பக்கம் எண் :

பக்கம் எண்:3

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
32. கரடு பெயர்த்தது
 
         எம்முடை யளவையிற் பண்புறப் பேணி
         நுன்பதிப் பெயர்க்கு மளவையி னும்பியர்
         நின்வழிப் படுகென மன்னவ னுரையாக்
   15    குலங்கெழு குமரரைக் குற்றே லருளிக்
         கலந்தவ ணின்ற கட்டுரைக் காலத்துத்
 
           (வியந்த வேந்தன் விளம்பல்)
          12 - 16 : எம்முடை...........காலத்து
 
(பொழிப்புரை) பிரச்சோதன மன்னவன் உதயணகுமரனை நோக்கி ''இறைமகனே ! நின் பெருந்தகைமைக்கேற்ப யாங்கள் நின்னைப் பேண ஆற்றேமாயினும், எம்முடைய ஆற்றற்கியன்ற அளவின் யாம் நின்னைப் பண்போடு பேணி உன் நகர்க்குப் போக்குமளவும் நின் தம்பிமாரும் எம் குலக்கொழுந்துகளாகப் பொருந்திய எம் மைந்தரும் ஆகிய இவர் நின்னுடைய வழிப்பட்டு ஒழுகுவாராக, அவரையெல்லாம் நின் மாணவராக ஏற்றுக் கோடல் வேண்டும்'' என்று வேண்டி அவரையெல்லாம் உதயணன் பணிக்கும் குற்றவேலைச் செய்யுமாறு பணித்து அவ்வுதயணனோடு நெஞ்சு கலந்து அவ்விடத்தே நின்ற அச்சொல்லாட்டப் பொழுதின்கண், என்க.
 
(விளக்கம்) நின்னுடைய பெருந்தகைமைக்கேற்ப யாங்கள் நின்னைப் போற்றும் ஆற்றலிலேம் என்பான் எம்முடை அளவையிற் பேணி என்றான். தான் உதயணனைத் தன் மக்களுள் ஒருவனாகக் கேண்மை கொண்டமை தோன்ற எம்மக்கள் என்னாது உம்பியர் என்றான். உம்பியர் - உன் தம்பிமார். வழிப்படுதல் - வழிபாடு செய்து குறிப்பறிந்து ஒழுகுதல். குற்றேல் - குற்றேவல் ; கெடுதல் விகாரம். நெஞ்சு கலந்து என்க. கட்டுரைக்காலம் - சொல்லாட்டம் நிகழ்த்தும்பொழுது.