பக்கம் எண் :

பக்கம் எண்:316

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
43. ஊர் தீயிட்டது
 
           கனவிற் கண்ட கண்ணார் விழுப்பொருள்
   105     நனவிற் பெற்ற நல்குர வன்போல்
          உவந்த மனத்தின் விரைந்தெழுந் தியூகியும்
          மறையத் திரிதரு மாந்தர்க் கெல்லாம்
          அறியக் கூறிய குறியிற் றாகப்
          பத்திரா பதத்துப் பகையமை போர்வை
   110     உட்குவரு முரச முருமுறழ்ந் ததிரக்
          கொட்டினன் கொட்டலுங் கொள்ளென வுராஅய்
 
                (யூகியின் செயல்)

                  104 - 111: கனவில்..........உராஅய்

 
(பொழிப்புரை) இத்தகையதோர் எதிர்பாராத சூழ்நிலை கண்ட யூகியும் கனவிலே கண்டகண்ணிறைந்த சிறந்த பொருளை நனவிலே கைவரப் பெற்றதொரு நல்குரவாளன் போலப் பெரிதும் மகிழ்ந்த மனத்தை யுடையவனாய் விரைந்து எழுந்து ஆங்குக் கரந்து திரியா நின்ற தன் கேளிர்க்கெல்லாம் தான் குறிப்பிட்டிருந்த செயல் தொடங்குங்காலம் இதுவென்றற்கு அறிகுறியுடையதாக ஏற்றுரி போர்த்த அச்சம் வருவதற்குக் காரணமான முரசத்தை இடி போன்று முழங்கும்படி முழக்கினன.் இம்முரச முழக்கம் கேட்டவுடனே அவனுடைய மறவர் ஞெரேலெனப் புறப்பட்டு யாண்டும் பரவி என்க.
 
(விளக்கம்) மாந்தர் - யூகியின் தமர். கொள்ளென - குறிப்பு மொழி; பொள்ளென என்றாற்போலக் கொள்க. உராய் - பரவி.