உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
44. பிடியேற்றியது |
|
கணிகை
யிரும்பிடி யணிநல
நசைஇயப்
பிடியொடு போந்த பெருங்களிற் றொருத்தலை
60 வீரிய விளையர் வாரியுள்
வளைஇ
மதந்தலை நெருங்கி மதக்களிறு
வலியாக்
கதந்தலை யழியக் கந்தொ
டார்த்துச்
சாம கீத வோசையிற்
றணிக்கும்
நூலறி பாகரொடு மேலறிவு கொள்ளா
65 திகழ்ச்சியின் விட்ட விறைவன்
போல
மகிழ்ச்சி யெய்தி மணிமுடி
வேந்தன்
வத்தவ ரிறைவனை விட்டன
னுழிதரல்
நீதி யன்று நெறியுணர்
வோர்க்கென
ஓதிய லாள ருடலுந ருழிதரப்
|
|
(அறிஞர்
கூற்று)
58 - 69 : கணிகை..........உழிதர
|
|
(பொழிப்புரை) மன்னன்குறையை
எடுத்துக்கூறித்திருத்துஞ் சான்றாண்மையுடையோ ரெல்லாம், "பொச்சாப்புடைய
நம் மணிமுடி மன்னவனாகிய பிரச்சோதனன், கணிகைத்தன்மை மிக்க பெரிய
பிடியானையினது ஒப்பனையழகையும் இயற்கையழகையும் விரும்பி
அப்பிடியானையோடு சென்ற தொருபெரிய களிற்றி யானையை மறப்பண்புடைய
இளைஞரான பாகர் அதனை அகப்படுத்தும் வாரியுள் வைத்து வளைத்துக்கொண்டு
மற்றொரு மத மிக்க களிற்றியானையைத் துணையாகக் கொண்டு அக்களிற்றின்
மதஞ்சொரியும் தலையை நெருங்கிப்பற்றுவித்து அதன்சினம் அழியுமாறு தறியோடு
கட்டிப் பின்னர் அதன் வெறியினைச் சாமகீதம் பாடுதலாலே ஆற்றுவிப்பாராக,
யானை நூலறிந்த அப்பாகரோடு இணங்கி அவர்கூறும் மேலாய அறிவுரைகளைக்
கொள்ளாமல் தனது பொச்சாப்பினாலே அந்த யானையைக் கட்ட விழ்த்து
விட்டுவிட்ட ஒரு பேதை மன்னனைப் போன்று உதயணன்பால்
மகிழ்ச்சிமிக்கவனாய் அவனை அவன் மனம்போல ஒழுகும்படி விட்டுவிட்டுச்
சுழல்வது அரசியனெறியுணர்ந்த பெரியோர்க்கு நீதியாகத் தோன்றமாட்டாது"
என்று மன்னனோடு மாறுபடுவோராய்ச் சுழலா நிற்ப என்க
|
|
(விளக்கம்) ஓதியலாளர்
வேந்தன் வத்தவரிறைவனை விட்டு உழிதரல் உணர்வோர்க்கு நீதியாகத்
தோன்றமாட்டாது என உடலுநராய் உழிதர என்க.
கணிகை - கணிகைத்தன்மை. களிறாகிய ஒருத்தல் என்க. இளைஞர்
யானைப்பாகர். இசையினால் யானைவெறி தணியும் என்ப. நூல் - யானை நூல்.
இகழ்ச்சி - பொச்சாப்பினாலுண்டான இகழ்ச்சி. மகிழ்ச்சியுமது
|
"இகழ்ச்சியிற் கெட்டாரை
உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து"
எனவரும் திருக்குறள் (539) ஈண்டு நினையற்பாற்று.
உழிதரல் - சுழலுதல். ஓதியலாளர் - மன்னனைத் திருத்தலாகாமையிற் கையறவு
கொண்டு சுழன்றனர் என்பது கருத்து. நீதி - அரசநீதி. நெறி -
அரசியனெறி.
|