பக்கம் எண் :

பக்கம் எண்:347

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
45. படைதலைக் கொண்டது
 
         
           பெருந்தகை யண்ணல் பிடிமிசை யேற்றித்
           திருந்திழை யணிந்த பரந்தேந் தல்குல்
           நீர்மைப் பல்காசு நிழலுமிழ்ந் திமைப்பப்
           பார்வை முள்கிய பட்டுநிறம் பயப்பத்
     5     தானமீக் கூரி மேனிவந் தோங்கி
           அமிழ்துபெய் செப்பி னன்ன வெம்முலை
           நுகர்பூங் காமத்து நுதிமுக முரிஞ்சிக்
           கடாஅ யானைக் கண்ணக மறைத்த
           படாஅத் தன்ன படிவத் தாகிய
     10     வடகப் போர்வையை வனப்பொடு திருத்திக்
           கடக முன்கைக் காஞ்சன மாலை
 
             (காஞ்சனமாலை செயல்)
        1 - 11: பெருந்தகை............காஞ்சனமாலை்
 
(பொழிப்புரை) இவ்வாறு கடகமணிந்த முன்கையையுடைய காஞ்சனமாலையானவள் பெருந்தகைமையையும் தலைமைத் தன்மையையும், உடைய உதயணகுமரன் பிடியின்மேல் வாசவதத்தையை ஏற்றிய பின்னர் அவ்வாசவதத்தை அணிந்த பரந்துயர்ந்த அல்குலின் மேற்கிடந்த நீர்மை மிக்க பலவாகிய மாணிக்கக் கோவைகளாகிய மேகலை ஒளிவீசி விளக்குதலானே காண்போர் கண்கள் கலந்த பட்டாடைக்குப் புதுநிறம் தோற்றுவியாநிற்பத் தாம் தோன்றிய இடமாகிய மார்பினது அகலத்தினும் மிகுத்து அடிபரந்து மேலே அணந்து வளர்ந்து அமிழ்தத்தைப் பெய்து வைத்த செப்புக்களை ஒத்த அவளது வெவ்விய முலைகளினது நுகர்தற்குரிய பொலிவுடைய காமத்தை யுண்டாக்கும் நுனியையுடைய முகத்தின்கண் உராஅய்ந்து, களிற்றியானையினது கண்களை அகத்தே மறைத்த முகபடாஅத்தைப்போன்று போர்த்திய வடிவமைந்த மேலாடையை அழகுறத் திருத்தி அமைத்து என்க.
 
(விளக்கம்) காஞ்சனமாலை (11) ஏற்றி (1) திருத்தி (11) என்க. திருந்திழை - வாசவதத்தை. பல்காசு - ஆகுபெயர். மேகலையென்க. முள்கிய - முழுகிய எனினுமாம். பட்டிற்கு நிறம்பயப்ப என்க. தானம் - இடம் - பிறந்தவிடம்; மார்பு என்க. மார்பின் அகலத்தினும் மீக்கூரி என்க. மீக்கூர்தல் - மிகுதல். வெம்முலையினது முகம், நுகர் காமத்து முகம், நுதிமுகம் எனத் தனித்தனி கூட்டுக.
    "கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
    படாஅ முலைமேற் றுகில்" (குறள் - 1087)
என்னுந் திருக்குறளை ஈண்டு நினைக. படாஅம் - முகபடாஅம். வடகமென்னும் போர்வை என்க. வடகம் - மேலாடை.