பக்கம் எண் :

பக்கம் எண்:357

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
            திருநக ரகவயிற் றிறன்மீக் கூரி
           ஒருதுணை வயவ ருள்வழித் திரிதர
           ஒடிவி றோற்றத் துதயண னூரும்
           பிடிவழிப் படரும் பேணா மள்ளரை
     5     அதிரத் தாக்குதற் கமைக்கப் பட்ட
           பதிநிலந் தோறும் பதிந்துமுன் னிருந்த
           ஐந்நூற் றைம்பத் தைவ ராடவர்
           செந்நூற் பத்திச் சேடகக் கையர்
           மன்னிய மாதிர மறுவின்று மயங்கி
     10     மின்னுமிழ்ந் ததுபோல் வீசிய வாளினர்
           கரண நுனித்த வரணக் காப்பினர்
           பின்சென் மாந்தரை முன்சென்று விலங்கி
 
                   (போர் நிகழ்ச்சி)
               1 - 12: திருநகர்..........விலங்கி
 
(பொழிப்புரை) இவ்வாறு வத்தவ நாட்டு வித்தக வீரர் அழகிய அவ்வுஞ்சை நகரத்தின் அகத்தே அந்நகரத்து ஒப்பற்ற துணைவராகிய படைவீரர் இருக்கும் இடம் நாடி ஆற்றன் மிக்குத் திரிதரா நிற்பக் குறைவற்ற பெருந்தகைத் தோற்றமுடைய உதயணகுமரன் ஊர்ந்து செல்லா நின்ற பத்திராபதியினைப் பின் தொடர்ந்து செல்லா நின்ற பகை மறவர்களை எதிர்த்து மனமதிரும்படி தாக்கும் பொருட்டு முற்படவே; யூகியாலே வழியிலுள்ள ஊர்தோறும் அமைக்கப்பட்டு மறைந்து அப்படை வரவினை எதிர்பார்த்திருந்த ஐந்நூற்றைம்பத்தைந்து மறவர் சிவந்த நூலாலே வரிசை வரிசையாக வரிந்து கட்டப்பட்ட கேடகமேந்திய கையையுடையராய், நிலைபெற்ற திசைகளிலே முகில்கள் குற்றமற நிரம்பி மின்னினாற் போன்று மின்னாநின்ற வாட் படைகளை வீசியவராய்ப், போர்க் கரணங்களை நன்கு கற்றுத்தேர்ந்து கவசமணிந்தவராய், அப்பிடியானையின்பின்னே செல்லா நிற்க பிரச்சோதனன் படை மறவர்க்கு முன் சென்று தடுத்து என்க.
 
(விளக்கம்) வயவர் - பிரச்சோதனன் படைமறவர். ஒடிவு - குறை. பேணா மள்ளர் - பகைமறவர். தாக்குதற்கு முற்படவே யூகியாலமைக்கப் பட்ட ஆடவர், முன்னிருந்த ஆடவர். ஐந்நூற்றைம்பத்தைவர் ஆடவர் எனத் தனித் தனி கூட்டுக. பதி - வழியினுள்ள ஊர். பதிந்து - மறைந்து. சேடகம் - கேடகம்; கிடுகு முகில் மின்னுமிழ்ந்ததுபோல் என்க. மாதிரம் ஆகுபெயராக முகிலுக்காயிற் றெனினுமாம். கரணம் - போரின்கட்செய்யும் செய்கை வகை. ''ஈரெண் கரணமும்'' என முன்னும் ஓதியது காண்க (3728).