பக்கம் எண் :

பக்கம் எண்:378

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
46. உழைச்சன விலாவணை
 
         
     195    தெரிவனன் கூறிய தெளிமொழி கேட்டே
           அன்ன தாகிய வருளுண் டாமெனின்
           அஞ்சொற் பேதா யதுவிது வாமெனப்
           பின்னிருங் கூந்தலொடு பிறழ்கலந் திருத்திக்
           கலக்க நீங்கெனக் காஞ்சனை தெருட்டி
     200   நலத்தகை மாதரு நனிநடுக் கொழிய
           வலத்தினும் வலியினும் வத்தவன் கடாவத்
 
        (காஞ்சனமாலை வாசவதத்தையைத் தேற்றல்)
              195 - 201: தெரிவனன்..........கடாவ
 
(பொழிப்புரை) தனதுள்ளக் கருத்தினை அவர்கட்குக் குறிப்பாக அறிவுறுத்துவானாய் உதயணன் கூறிய இந்தப் பொருள் தெளிந்த மொழியைக்கேட்ட காஞ்சனமாலை வாசவதத்தையை நோக்கி 'அழகிய சொற்களையுடைய பேதாய்! அத்தகையதோர் அருள் நம் பெருமானுக்கு நம்பாலுண்டாயின் நாம் துணிந்த அச் செயலே இவன் செயலுமாகும்' என்று குறிப்பாகக்கூறித் தேற்றி அவளது பின்னப்பட்ட பெரிய கூந்தற் கற்றையையும், பிறழ்ந்து கிடக்கும் அணிகலன்களையும் திருத்தி, 'நங்காய்! நீ இனிக் கலங்குதலை ஒழிக!' என்று கூறித் தெளிவித்தலாலே பெண்மை நலத்தின் தகுதி மிக்க அவ்வாசவதத்தை தானும் உதயணன் கருத்தறிந்து நெஞ்சந் துணிந்து நடுக்க மொழியாநிற்ப, உதயண குமரனும் வெற்றியானும் ஆற்றலுடைமையானும் பத்திராபதியை விரைந்து செலுத்தாநிற்ப என்க.
 
(விளக்கம்) தெரிவனன் - தெரிவிப்பானாய். அன்னது ஆகிய அருள் என்றது வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போகும் அருளுடைமை என்றவாறு. அது என்றது தானும் அவளும் கற்புக்கெட வரு வழி உதயணனோடு உடன்போக்கினைத் துணிந்திருந்தமையைச் சுட்டியவாறு. இது என்றது எம்பெருமானும் தன்னுடன் அழைத்துப் போகும் இச்செயல்தானும் என்றவாறு. எனவே நாங்கருதியதனையே எம்பெருமானுங் கருதி இவ்வாறு செய்கின்றான் என்று தேற்றியபடியாம்.