பக்கம் எண் :

பக்கம் எண்:392

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
47. உரிமை விலாவணை
 
         
           கைவிரல் பிசைந்து பையென வருவழி
           வில்கைக் கொண்டவன் விடுக்கப் பட்ட
           வல்வினைக் கொடுந்தொழில் வராகன் வந்துதன்
     5     கோமக னிருந்த கோயி னெடுங்கடைத்
           தோரணக் கந்தின் றாண்முதல் பொருந்திக்
           கடிகமழ் நறுந்தார்க் காவலற் குறுகி
           அடியுறை யருண்மொழி யான்பணிந் துரைப்பச்
           செவ்வி யறிந்து நொவ்விதின் வருகெனக்
     10     கோற்றொழி லவற்குக் கூறின னிற்ப
 
              (வராகன் செயல்) 
          1 - 10: செய்வதை..........நிற்ப
 
(பொழிப்புரை) இவ்வாறு நகரமக்கள் பலரும் தாம் செய்வதின்ன தென்றறியாமல் திகைத்துக் கை விரல்களைப் பிசைந்து கொண்டு மெல்ல வருகின்ற பொழுது, வஞ்சித்து வில்லைக் கைப்பற்றிக் கொண்டு உதயணனால் விடுக்கப்பட்ட வலிய வினையாகிய கொடிய காவற்றொழிலை மேற்கொண்ட வராகன் மீண்டுவந்து பிரச்சோதன மன்னன் வீற்றிருந்த அரண்மனையினது நெடிய தலைவாயிலை எய்தி ஆங்கு நின்ற தோரணத்தூணின் அடியினைச் சேரநின்று ஆங்குநின்ற மணங்கமழும் நறிய மலர் மாலை யணிந்த வாயில் காவலனை அணுகி, "வாயிலோயே! அடியுறையாகிய உதயணன் கூறியருளிய மொழிகளை யான் நம்பெருமான் அடி பணிந்து கூறுதற்குத் தகுந்த செவ்வியினை அறிந்து விரைந்து வருக!" என்று பிரப்பங்கோலேந்துந் தொழிலையுடைய அவ்வாயில் காவலனுக்குக் கூறி நிற்ப என்க.
 
(விளக்கம்) திகைப்புற்றோர் கைவிரல்களைப் பிசைதல் இயல்பு. பையென - மெல்ல. வில்கைக்கொண்டவன் - உதயணன். கன்னி மாடக் காவற்றொழிலாதலின் வல்வினைக் கொடுந்தொழில் என்று விதந்தார். தன்கோமகன் - பிரச்சோதனன். தோரணக் கந்தின் கீழ் வாயில் காவலர் நிற்றல் மரபு . அடியுறை என்பது அடியவன் என்னும் பொருள்பட வருவதோர் சொல். ஈண்டு அடியுறை என்றது உதயணனையுட்கொண்டு. உதயணனும் மன்னனாதலின் அருள்மொழி என்றான். நொவ்விதின் - வினரந்து. கோற்றொழிலவன் - வாயிலோன்.