உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
47. உரிமை விலாவணை |
|
உரைத்த மாற்ற முணரக் கேட்டே 100
செருச்செய் நெடுங்கண் டீயெனச்
சிவப்பப்
பிரச்சோ தனனெனும் பெரும்பெயர்
விளக்கம்
மகிழ்ச்சி யெய்தி வத்தவற்
றெளிந்த
இகழ்ச்சி யளற்று ளிறங்கிற்
றின்றெனச்
சுற்ற மாக்களைச் சுடுவான் போலப்
105 பொற்றார் மார்பன் பொங்குபு வெகுண்டு
|
|
(பிரச்சோதனன்
செயல்) 99 - 105:
உரைத்த..........வெகுண்டு
|
|
(பொழிப்புரை) பொன்மாலை புரளும்
மார்பினையுடைய பிரச்சோதனன் வராகன் கூறிய மொழியை விளங்கும்படி
கேட்டலும் தனது அரசியற் சுற்றத்தாரையே சுடுவான் போன்று
சினந்து பொங்கிப் போராற்றும் தறுகண்மை மிக்க தனது நெடிய கண்கள்
நெருப்புப் போலச் சிவவாநிற்ப "இன்று பிரச்சோதனன் என்று கூறப்படுகின்ற
பெரிய புகழையுடைய குன்றாவிளக்கம் சிறந்த உவகை மகிழ்ச்சி யுற்றுப்
பகைவனாகிய உதயணனை ஆராயாது தெளிந்தமையாலுண்டான இளிவரல் ஆகிய
சேற்றின்கண் இறங்கியொழிந்தது" என்று கூறி என்க.
|
|
(விளக்கம்) தன்குடியை விளக்குதலானே விளக்கம் என்றான். "குடி யென்னும்
குன்றாவிளக்கம்" என்றார் வள்ளுவனாரும் (601). பெயர் -- புகழ்.
மகிழ்ச்சி என்றது உவகை மகிழ்ச்சியிலுற்ற சோர்வினை,
|
"இறந்த வெகுளியிற் றீதே
சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு"
(குறள் - 531)
என்னும் வள்ளுவர் பொன்மொழியுங்
காண்க.
|