பக்கம் எண் :

பக்கம் எண்:424

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
48. மருதநிலங் கடந்தது
 
           விழவணி விழுநகர் விலாவணை யெய்த
          முழவணி முன்றிலொடு முதுநகர் புல்லென
          அழுகை யாகுலங் கழுமிய கங்குல்
          மதியா மன்னனைப் பதிவயிற் றம்மென
     5    வெல்போர் வேந்தன் விடுக்கப் பட்ட
          பல்போர் மறவ ரொல்லென வுலம்பிப்
 
        (பிரச்சோதனன் படை வீரர் செயல்)
           1 - 6 :  விழவணி..........உலம்பி
 
(பொழிப்புரை) நீர்விழாவின்பொருட்டு அமைக்கப்பட்ட சிறந்த புதிய நகரத்துள்ள மாந்தர் இவ்வாறு அழுகையை எய்தா நிற்ப வெற்றி முரசினையும் ஒப்பனையையும் உடைய தலை வாயிலோடு பழைய உஞ்சைமாநகரமும் பொலிவிழந்து புல்லிதாகும்படி அழுகைத் துயரம் நிரம்பிய அந்தநாள் இரவின்கண் வெல்லும் போரையுடைய பிரச்சோதன மன்னனாலே "நம்மை மதியாத அவ்வுதயண மன்னனைப்பற்றி நம் நகரத்தே கொண்டு வாருங்கோள்" என்று ஏவப்பட்ட பல்வேறு போர்த்தொழிலினிலும் வல்லுநரான உஞ்சை மறவர் எல்லாம் ஒல்லென ஆரவாரித்து என்க.
 
(விளக்கம்) விலாவணை - அழுகை. முதுநகர் - உஞ்சை நகரம். ஆகுலம். துயரம். மதியாமன்னன்: உதயணன். பதி - ஊர். வேந்தன்: பிரச்சோதனன். ஒல்லென: ஒலிக் குறிப்பு. மொழி உலம்பி - ஆரவாரித்து.