உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
49. முல்லை நிலங் கடந்தது |
|
இருளிடை மருங்கி னிருநிலந்
தழீஇய அருமதிற்
படப்பை யருட்ட
நகரகம் உருள்பட
லொற்றி யூடெழுப்
போக்கிக்
கருங்கட் பம்பை நெருங்கக் கொட்டி
5 அழற்படு சீற்றத் தஞ்சுவளி
செலவிற் கழற்கா
லிளையர் கலங்காக்
காப்பின் இயற்றப்
பட்ட வியற்கை யிற்றென
வயத்தகு நோன்றாள் வயந்தக
குமரன் ஆழ்கடற்
பௌவத் தருங்கல மியக்கும் 10
நீயான் போல நெஞ்சுணர் மதிப்பினன்
|
|
(வயந்தகன் கூறல்)
1
- 10:
இருள்...........மதிப்பினன்
|
|
(பொழிப்புரை) இவ்வாறு
இருளினூடே சென்றெய்திய அவ்வருட்ட நகரின் இயல்பினை உதயண குமரனுக்கு
வயந்தக குமரன் உணர்த்து பவன், 'பெருமானே ! பெரிய நிலப் பரப்பைத்
தழுவியிருந்த கடத்தற் கரிய மதிலையுடைய பக்கத்தையுடைய இந்த அருட்ட
நகரத்தின் உள்ளி டத்தே பிறர் புகுதாதபடி உருண்டியங்கும் படல்களைச்
சார்த்தி அகத்தே எழு மரத்தையிட்டுக் கரிய கண்ணமைந்த பம்பையினை
இடையீடின்றி முழக்கிக் காக்கின்ற தீப்பறக்கும் சினத்தையும் அஞ்சுதற்குக்
காரணமான கடுங்காற்றுப் போன்ற செலவினையும் மறக்கழல் கட்டிய காலையும்
உடைய இளமறவர் காக்கின்ற கலங்காத வலிய காவலை உடையதாய்
இயற்றப்பட்ட இயற்கையினையுடையது' என்று கூறி, வலிமை தக்கிருக் கின்ற
முயற்சியினையுடைய அவ்வயந்தக குமரன் ஆழ்ந்த கடலாகிய பௌவத்தின்கண்
செலுத்தற்கரிய மரக் கலத்தை இயக்காநின்ற மாலுமி போன்று தாம் செல்லும்
வழியைத் தன் நெஞ்சத்தாலே ஆராய்ந்து துணியும் துணிவையுடையவனாய் என்க
|
|
(விளக்கம்) மதிற்படப்பை - மதிற்புறம். உருண்டியங்கும் படல்
என்க. இவை நகரத்தினுட்புகும் வழியை மறைப்பன. எழு - தடை மரம். கொட்டி -
முழக்கி. கொட்டிக் காக்கும் காப்பினையுடையதாய் இயற்றப்பட்ட என்க.
இயற்கையிற்று - இயல்புடையது. தாள் - முயற்சி. கடற் பௌவம்; இருபெயரொட்டு.
கலம் - மரக்கலம். நீயான் - மாலுமி. இது மீயான் என்றும்
வழங்கப்படும்.
|