பக்கம் எண் :

பக்கம் எண்:460

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
51 நருமதை கடந்தது
 
           எய்தி யிகந்த வியற்றமை யிரும்பிடி
          கொய்பூங் குறிஞ்சிக் கொழுநிலங் கைவிட்
          டைந்நான் கெல்லையொ டாறைந் தகன்றபின்
 
        1 - 3: எய்தி..........அகன்றபின்
 
(பொழிப்புரை) இவ்வாறு குறிஞ்சி நிலத்தில் விரைந்து சென்று கடந்த ஒப்பனையமைந்த அப்பெரிய பிடியானை கொய்தற்கியன்ற மலரையுடைய கொழுவிய அக்குறிஞ்சி நிலத்தைவிட்டு இருபத்தைந்து காவத வழியைக் கடந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) கொழுநிலம் - செழித்த நிலம். ஐந்நான்கு எல்லை யோடு ஐந்து ஆறு என மாறுக. ஆறு - வழி. இருபத்தைந்து காவத வழி என்றவாறு.