உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
52. பாலை நிலங் கடந்தது |
|
கார்நீர்
நருமதைக் கரையகங்
கடந்தபின் வார்நீர்
துடைத்து வயந்தக
னேறி வானக
நாண்மீன் றான
நோக்கி ஆற்றின
தளவு மாரிரு ளெல்லையும் 5 ஏற்றமை
யிரும்பிடி யியக்கமு மெண்ணி
|
|
(வயந்தகன்
செயல்)
1 - 5 : கார்..........எண்ணி்
|
|
(பொழிப்புரை) உதயணன்
முதலியோர் இவ்வாறு கரிய நீரையுடைய நருமதைப் பேரியாற்றின் கரையைக்
கடந்தபின்னர், வயந்தகன் தன்னுடம்பில் வழியாநின்ற நீரைத்
துடைத்துக்கொண்டு பிடியின்மேல் ஏறியிருந்து வானத்தின்கண் மிளிரும் நாளும்
கோளுமாகிய விண்மீன்களிருக்கு மிடத்தை ஆராய்ந்து அவ்விராப் பொழுதின்
அளவையும் தாம் செல்லவேண்டிய வழியின் அளவையும் தாம் ஏறுதற்கமைந்த பெரிய
பிடியானையின் இயக்கத்தினியல்பையும் ஒத்திட்டுப் பார்த்து
என்க.
|
|
(விளக்கம்) கார்நீர்
- கரியநீர். வார்நீர் : வினைத்தொகை. நாளாகிய மீன் என்க. ஆறு -
வழி. இருளெல்லை - இரவின் அளவு. ஏற்று -
ஏறுதல்.
|