பக்கம் எண் :

பக்கம் எண்:484

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
53. பிடி வீழ்ந்தது
 
           அசைந்த விரும்பிடி யற்ற நோக்கி
          வயந்தக குமரற்கு வத்தவ னுரைக்கும்
          நொப்புணை வலியா நுரைநீர்ப் புக்கோற்
          கப்புணை யவல்வயி னவன்கை தீர்ந்தாஅங்
     5    கவந்தியர் கோமா னருண்முந் துறீஇப்
          பை..........க கொலைப்பாற் படவகுத் தீந்த
          அரும்பிடி நம்மை யாற்றறுத் தன்றாற்
          கரும்படு தீஞ்சொற் காஞ்சனை யெழீஇ
 
             (உதயணன் செயல்)
        1 - 7: அசைந்த..........ஆற்றறுத்தன்றால்
 
(பொழிப்புரை) இவ்வாறு நடையோய்ந்துநின்ற அப்பெரிய பிடி
  யானையினது சோர்வினை உணர்ந்து உதயணகுமரன் வயந்தக
  குமரனுக்குக் கூறுவான்:-- 'நண்பனே! நொய்யதொரு தெப்பத்தைக்கைக்
  கொண்டு நீந்தி நுரையையுடைய வெள்ளத்தைக் கடக்கப்புகுந்தோன்
  ஒருவனுக்கு அத்தெப்பம் ஆழமான இடத்திலே அவன் கையினின்றும்
  நழுவிப் போனாற் போன்று, அவந்தியர் அரசனாகிய பிரச்சோதன
  மன்னன் தன் அருளை முன்னிட்டு (பை..........க) கொலைத்தொழிலின்கண்
  ஈடுபட நமக்குக் கூறுபடுத்தி  வழங்கிய பெறுதற்கரிய இப்பிடியானை
  நம்மை வழியிலே கைவிட்டொழிந்தது காண்!' என்று கூறி என்க.
 
(விளக்கம்) அற்றம் - சோர்வு. நொப்புணை - நொய்மையுடைய
  தெப்பம். நுரைநீர் - வெள்ளம். அவல் - பள்ளம். அவந்தியர்
  கோமான் - பிரச்சோதனன். 6 ஆம் வரியில் ஒரு சீர் சிதைதலின்
  பொருள் விளக்கமுமில்லை. ஆற்றறுத்தல் வழியில் துணையாகி
  வந்தோர் இடையூறுறுஞ் செவ்வி தேர்ந்து கைவிட்டுப் போதல்.