பக்கம் எண் :

பக்கம் எண்:508

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
54. வயந்தகன் அகன்றது
 
           கரந்தன ரொடுங்கிய கடும்பகல் கழிந்தபின்
          பரந்த வானம் பசலை யெய்த
          அழலுமிழ் கதிரோ னத்தஞ் சேர
          நிழலுமிழ் செல்வ னிலாவிரித் திமைப்ப
     5    வான்றோ யிஞ்சி வளநகர் வரைப்பிற்
          றேன்றோய் கோதைத் திருநிலை மகளிர்
          வெள்ளி விளக்கத் துள்ளிழு துறீஇப்
          பள்ளி மாடத்துப் பரூஉச்சுடர் கொளீஇக்
          காடி கலந்த கோடிக் கலிங்கம்
     10   கழும வூட்டுங் காழகி னறும்புகை
          முழுநிலா மாடத்து முடிமுத றடவக்
 
                  (அந்தி வருதல்)
             1 - 11 : கரந்தனர்..........தடவ
 
(பொழிப்புரை) இவ்வாறு உதயணன் முதலியோர் இலவ மரத்தின் கீழ் மறைந்துறைந்த கடிய அப்பகற்பொழுது கழிந்த பின்னர் அகன்ற வானம் பொன்னிறம் பூப்பவும், தீயைச் சொரிகின்ற ஞாயிற்று மண்டிலம் மேலைமலையை எய்தா நிற்பவும் குளிர்ச்சி தருகின்ற செல்வனாகிய திங்கட்கடவுள் தனது நிலாவொளியை உலகமெல்லாம் பரப்பி விளங்கா நிற்பவும், வானத்தைத் தீண்டும் மதிலையுடைய வளமிக்க உஞ்சை நகரத்தின்கண் தேன்தோய்ந்த மலர்மாலை யணிந்த அழகுநிலைபெற்ற இளமகளிர் வெள்ளியா லியன்ற தகளிகளில் அகத்தே நெய் பெய்து தத்தம் பள்ளி மாடத்தே பரிய விளக்குகளை ஏற்றிக் கஞ்சியூட்டப்பட்ட புத்தாடை மயங்கும்படி ஊட்டாநின்ற கரிய அகிலினது நறுமணமுடைய புகை நிறைத்திங்கள் ஒளியை நுகருமிடமான நிலா மாடத்து உச்சியைத் தடவாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) வான்றோய் இஞ்சி வளநகர் என்றது உஞ்சை நகரத்தை. இஞ்சி - மதில். திரு - அழகு. விளக்கம் - தகளி. இழுது - நெய். பள்ளிமாடம் - படுக்கையறையையுடைய மாடம். பரூஉச்சுடர் - பரியதாய் எரியும் தீப்பிழம்பு. காடி - கஞ்சி.