பக்கம் எண் :

பக்கம் எண்:524

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
55. சவரர் புளிஞர் வளைந்தது
 
           புலர்ந்த காலைப் பூங்கழற் குருசில்
          மலர்ந்த பொய்கையுண் மணிநிறத் தெண்ணீர்க்
          கொழுமலர்த் தடக்கையிற் கூட்டுபு கொண்டு
          குழவி ஞாயிற் றெழிலிகந் தெள்ளும்
     5    திருமுக மருங்கிற் செருமீக் கூரி
          ஒள்ளிழை மகளி ருள்ளங் கவற்றும்
          செந்தா மரைக்கண் கழீஇ மந்திரத்
          தந்தி கூப்பித் தென்புலக் கிறைஞ்சி
 
               (உதயணன் செயல்)

               1 - 8: புலர்ந்த............அந்திகூப்பி

 
(பொழிப்புரை) இங்ஙனமாக அற்றையிரவு ஒருவாறு கழிந்த பின்னர் அழகிய வீரக்கழலையணிந்த அரசனாகிய உதயணன் நீர்ப்பூக்கள் மலர்ந்த பொய்கையினை எய்தி நீலமணி போன்ற நிறமுடைத்தாய்த் தெளிந்த நீரைத் தனதிரு கொழுவிய தாமரை மலர் போன்ற பெரிய கைகளைக் கூட்டி முகந்து கொண்டு இள ஞாயிற்றினையும் தன் அழகாலே இகழாநின்ற தன் திருமுகத்தமைந்த போர்ப்பண்பு மிக்கு ஒள்ளிய அணிகலனை யணிந்த மகளிர் நெஞ்சத்தை வருத்து மியல்புடைய செந்தாமரை போன்ற தன் கண்களைக் கழுவித் தூய்மை செய்துகொண்டு மறைமொழி கூறிக் கைகூப்பிக் காலைக் கடனை முடித்த பின்னர் என்க.
 
(விளக்கம்) குருசில் - உதயணன். மணி - நீலமணி. கொழு மலர் - தாமரை மலர். கூட்டுபு - கூட்டி. குழவி ஞாயிறு - இள ஞாயிறு. எழில் - அழகு. செரு - போர்ப்பண்பென்க. எனவே தறுகண்மையினும் மிக்கு என்றவாறு. கவற்றும் - வருத்தும். கூப்பி - கைகூப்பி. அந்தி - காலை. அந்திக் கடன் முடித்து என்று வருவித்துக் கொள்க. பின்வரும் தென்புலக்கு இறைஞ்சி என்பதனை வாசவதத்தையின் செயலாகக் கொள்க.