உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
55. சவரர் புளிஞர் வளைந்தது |
|
புரக்கூட் டமைந்த வரக்கூட்
டரத்தம் 100 பவளத் துணியிற் பசுமையொடு
கிடப்ப இன்னணிப்
புக்கோ ரிவ்வழி
யல்லது மற்றவ
ரெங்கு மறைந்திலர்
காண்கெனச்
செல்வோ ரொருங்குடன் வல்லையும்
வழியும் வான்மரப்
பொதும்புங் கானமுங் கடறும் 105 முழைவளர்
குன்றுங் கழைவளர்
கானமும் பயம்பும்
பாழியு மியங்குவனர்
வதியும் முதுமரப்
பொத்தும் புதுமலர்ப்
பொய்கையும்
இனையவை பிறவு மனையவ
ருள்வழிச் செருக்கய
லுண்கட் சீதையைத் தேர்வுழிக் 110
குரக்கினத் தன்ன பரப்பின ராகிப்
|
|
(வேடர் செல்லுதல்)
99 - 110:
புரக்கூட்டு.........பரப்பினராகி
|
|
(பொழிப்புரை) நகரத்தே நனி நாகரிக மகளிர் பொருட்டுக்
கூட்டியமைத்த செம்பஞ்சுக் குழம்பு, பவளத் துண்டுபோன்று ஈரத்தோடு
கிடத்தலைக் கண்டு 'இக்குழம்பு உலரமாட்டாத இவ்வளவு அணிமைப் பொழுதில்
இவ்விடத்தே சென்றவர் இப்பாலை நிலத்திலேயே செல்வதன்றி அவர் தாம்
வேறெவ் விடத்தினும் சென்று மறைந்திரார்; ஆதலால் நன்கு தேடிப்
பாருங் கோள் என்று கூறிப் பின்னரும் விரைந்து செல்லாநின்ற அவ்வேடர்
ஒருங்கே ஆங்குள்ள சிற்றரண்களையும், வழிகளையும் உயர்ந்த மரச்
செறிவுகளிடத்தும் குறுங்காடுகளிடத்தும் மலைச்சாரலிடத்தும் குகை களைடைய
உயரிய குன்றுகளிடத்தும் மூங்கில்கள் வளர்ந்த புதர்க ளிடத்தும்
பள்ளங்களிடத்தும் பாழிடங்களினும் வழிப்போக்கர் தங்கும் முதிய
மரப்பொந்துகளிடத்தும் புதிய மலர்களையுடைய பொய்கைக் கரைகளிடத்தும்
இன்னோரன்ன பிறவிடங்களினும் அவ்வழிப்போக்கர் இருக்குமிடத்தைக்
காண்டற் பொருட்டு அரக்கனாற் கவர்ந்து செல்லப் பட்ட ஒன்றோடொன்று
போர் புரிகின்ற இரண்டு கயல் மீன்களைப் போன்று கண்டோர் நெஞ்சுண்ணும்
கண்களையுடைய சீதையைத் தேடிய காலத்தே குரங்கினங்கள் யாண்டும் பரவித்
தேடினாற் போன்று யாண்டும் பரவித் தேடுகின்ற பரப்பினையுடையராகி
என்க.
|
|
(விளக்கம்) புரம் - நகரம். கூட்டு - மணப் பொருட்கலவை.
அரக் கூட்டரத்தம் - செம்பஞ்சுக் குழம்பு. இது வாசவதத்தையுடைய
தென்க. பவளத் துணி - செம்பஞ்சுக் குழம்பிற் குவமை. பசுமை - ஈரம். இன்
அணி - இவ்வளவு அணிமைப் பொழுதில். வல்லை - சிற்றரண். மரப்பொதும்பு -
மரச்செறிவு. கானம் - காடு. கடறு - மலைச் சாரலிற் காடு. முழை - குகை. கழை
- மூங்கில். பயம்பு - பள்ளம். பாழி - பாழ்நிலம். இயங்குவனர் -
வழிப்போக்கர். அனையவர் - அந்த வழிப்போக்கர். உண்கண் -
நெஞ்சுண்ணுங் கண். அரக்கனாற் கவரப்பட்ட சீதையை
என்க.
|