பக்கம் எண் :

பக்கம் எண்:542

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           தெரிவுறு சூழ்ச்சியர் செய்வதை யறியார்
           ஒருவ னாம்பல ரொழிவமென் னாது
           விசையுடை வெங்கணை விற்றொழி னவின்ற
           அசைவி லாள னழிக்கவும் பட்டனம்
     5      உரைமி னொல்லென வுறுவது நோக்கிக்
           கருவினை நுனித்து வருவினை யாண்மைப்
           புள்ளுணர் முதுமகன் றெள்ளிதிற் றேறி்
           இளையவர் கேட்க விற்றென விசைக்கும்
           கிளையுடைப் பூசலொடு முளையரில பிணங்கிய
     10     முள்ளரை யிலவத் துள்ளவ ரிருப்பக்
           கேளிழுக் கறியாத் தாளிழுக் குறீஇயினிர்
           கோளிமிழ் கனலி சூழ்திசைப் பொத்திப்
           புகையழ லுறீஇப் புறப்படுத் தவர்களை
           நவையுறு நடுக்கஞ் செய்த லுணரீர்
     15     கள்ள மின்றிக் கட்டாள் வீழ்த்த
           வெள்ளை வேட்டுவீர் புள்ளெவன பிழைத்ததென்
           றுள்ளழிந் தவர்கட் குறுதி கூறக்
 
          (வேடர் எண்ணுதலும் நிமித்திகன் உபாயங் கூறலும்)
                    1 - 17: தெரிவுறு......கூற
 
(பொழிப்புரை) கண்டு கைவிடுதல் நங்கருமமன்று இவனை எவ்வாற்றான் கைப்பற்றுவேம்? என ஆராய்கின்ற ஆராய்ச்சியினையுடைய அவ்வேடர் அதற்கோர் உபாயமும் அறியாராய் "அவனோ ஒருவன், யாமோ பலர்; அங்ஙனமிருந்தும விரைந்து செல்லுதலையுடைய அம்புகளையுடைய வில்வித்தை பயின்றுள்ள அம் மெலிவில்லாத வீரனாலே யாம் அழிக்கவும் பட்டேம். ஆதலால் யாம் ஓடி விடுவோம் என்று கூறாமல் அவனை வெல்லுதற்கோர் உபாயம் விரைவாகக் கூறுங்கோள் !" என்று தம்முட்சிலர் வினவாநிற்ப, நிகழாநின்ற நிகழ்ச்சியை நோக்கி இனி நிகழ்தற்கு எதிர்காலத்தின் அகட்டில் கருவாயிருக்கின்ற செயல்களைக் கூர்த்துணர்ந்த செயற்கரிய தொழிலை மேற்கொண்ட புண்ணிமித்தம் உணரும் முதுமையுடைய அவ்வேட்டுவன், வினவிய இளவேடர் கேட்கும் பொருட்டுத் தனக்குள்ளே ஆராய்ந்து இனியும் செய்யற்பாலது இஃதென்று கூறுவான் நம்முறவினருடைய ஆரவாரங்கேட்டன் மாத்திரையே மூங்கிற்றூறுகள் பின்னிய முள்ளையுடைய அடியினையுடைய இலவின்கீழ் அவர் இருப்ப, நீயிரோ நம்மனோர் கேட்டினை அறியாததற்குக் காரணமான நன்முயற்சியில் தவறிவிட்டீர். கொல்லுதல் மிக்க நெருப்பினை அவரைச் சூழ எல்லாத் திசைகளினும் மூட்டிவிட்டுப் புகையையும் நெருப்பையும் உண்டாக்கி, அவர்களை அவ்வரணினின்றும் வெளிப்படச்செய்து அவர் துன்புறுதலாலே நடுங்கும்படி செய்ய அறிந்திலீர் ! அந்தோ ! விரகின்றி வீணேகட்டமைந்த உடலுடைய நம் ஆள்களைக் கொன்றொழித்த வெள்ளையுள்ளமுடைய வேட்டுவீரே! இங்ஙனம் செய்யாமையாலே நீயிர் பிழைசெய்த தல்லால், யான் கூறிய புண்ணிமித்தம் தவறியது யாது? என்று ஊக்கமழிந்து நின்ற அவ்வேடர்க்கு உறுதியாயதோர் உபாயத்தை எடுத்துக் கூறாநிற்றலாலே என்க.
 
(விளக்கம்) அசைவிலாளன் ஒருவன் நாம் பலர் என இயைக்க. ஒழிவம் என்னாது என்றது அவ்வுபாயம் யாருமறிவதே அங்ஙனம் கூறிவிடாதே கொண்மின் என்றவாறு. அசைவிலாளன் என்றது உதயணனை. அசைவு - இளைப்பு. தம்மிற் பலர் இறந்தமைக்கு நாணுவார் அழிக்கவும் பட்டனம் என்றார். ஒல் உரைமின் என என்று மாறுக. ஓல்: விரைவுக் குறிப்பு. உறுவது - உண்டாகும் புட்குரல் முதலிய நிமித்தம். எதிர்காலத்தே கருவாய்க்கிடந்து நிகழ்காலமாகுந்தோறும் காரியப்படுதலின் எதிர்கால வினையைக் கருவினை என்று நுண்ணிதின் உரைத்தலறிக. வினையாண்மை - வினையை ஆளுந்தன்மை. புள் - நிமித்தம் முதுமகன் என்றது முன்பு குறிகூறிய வேட்டுவனை. இற்று - இஃது இம்முதுவேடன் கூறும் உபாயம் மிகவுந் திறமுடையதாதலையும் உணர்க. கிளை - உறவினர். பூசல் - ஆரவாரம். முளையரில் - மூங்கிற்றூறுகள். கேள் - தமர். இழுக்கு அறியாமைக்குக் காரணமான நன்முயற்சியில் தவறினீர் என்க. அம்முயற்சி இஃது என மேலே கூறுகின்றான். கோள் இமிழ் - கொல்லுதலும் ஆரவாரமும் உடைய. கனலி எனினுமாம். கனலி - நெருப்பு. பொத்தி - மூட்டி. கள்ளம் - என்றது ஈண்டு விரகு என்பதுபட நின்றது கட்டான உடலுடைய ஆள் என்க. வெள்ளை வேட்டுவீர் ! என்னும் வசைமொழி இனிதாதலுணர்க. வெள்ளை - பேதைமை. எவன் - யாது. உள்ளழிதல் - ஊக்கமழிதல். உறுதிபயக்கும் உபாயம் என்க.