பக்கம் எண் :

பக்கம் எண்:577

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
56. வென்றி யெய்தியது
 
         
           பைவரி நாகத் தைவாய்ப் பிறந்த
           ஒலிப்புயிர் பெற்ற வெலிக்கணம் போல
     275   ஒழிந்தோ ரொழியக் கழிந்தோர் காணா
          ஆறுகொண் மாந்தர்க் கச்ச மெய்தி
           ஏறுபெற் றிகந்த பின்றை வீறுபெற்
           றங்கண் விசும்பிற் றிங்களைச் சூழ்ந்த
           வெண்மீன் போல வென்றி யெய்திப்
     280    பன்மாண் படைஞர் பரந்தனர் சூழ
           மலிந்தவ ணேறி வத்தவர் பெருமகன்
           கலிந்த துன்பங் கையிகந் தகலப்
 
              (இதுவுமது)
       273 - 283: பைவிரி...........இடையென்
 
(பொழிப்புரை) படம் விரிந்த ஐந்தலைப்பாம்பினது ஐந்து வாங்களினின்றும் ஒலியுடைய மூச்சுக்காற்று வீசப்பெற்ற எலிக் கூட்டம் போன்று இறந்துவீழ்ந்த வேடர் ஒழிய ஓடியவர், தம்முள் ஒருவரை ஒருவர் காணமாட்டாதபடி தம்மை வழியிலே கண்ட வழிப்போக்கர்க்கு அச்சம் எய்துவித்து இம்மறவர் எறிந்த படைகளாலே உண்டான புண்களோடு ஓடிப்போனபின்னர்ப் பலவாகிய மாண்புடைய இடபகன் படைமறவர் வெற்றியாலுண்டான பேரழகோடு அழகிய இடமமைந்த வானத்தே திங்கள் மண்டிலத்தைச் சூழ்ந்த வெள்ளிய விண்மீன்கள் போன்று தன்னைச் சூழாநிற்ப வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணகுமரன் பெருகிய தனது துன்பமெல்லாம் ஒருங்கே தன்னைக் கைவிட்டு அகன்றொழிய அப்போர்ப் படையினிடையே உளமலிந்த உவகையோடு சென்று பொலிவுற்றுத் திகழாநின்றான் என்க.
 
(விளக்கம்) நாகத்து ஒலிப்புயிர் பெற்ற எலிக்கணம் போல என்னும் இதனோடு ''ஒலித்தக்கா லென்னாம் உவரி யெலிப்பகை, நாக முயிர்ப்பக் கெடும்'' என்னும் திருக்குறளையும் நினைக (163).

   ஆறுகொண் மாந்தர் - வழிப்போக்கர். எய்தி - எய்த. ஏறு - படையெறிந்தமையா லுண்டான புண். வீறு - வேறொன்றற்கில்லாத சிறப்பு. கவிந்த: கலித்த என்பதன் மெலித்தல் விகாரம்.

    56. வென்றி எய்தியது முற்றிற்று
------------------------------------------------