பக்கம் எண் :

பக்கம் எண்:578

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
57. படை வீடு
 
           பொருபடை யிளையர் புகன்றனர் சூழ்ந்து
          செருவடு செம்மலைச் செல்ல லோம்பிக்
          கூப்பிய கையினர் காப்பொடு புரிய
          வண்டலர் படலை வயந்தக குமரனும்
     5    தண்டத் தலைவனுந் தலைப்பெய் தீண்டிக்
          கனிபடு கிளவியைக் கையகப் படுத்துத்
          துனிவொடு போந்த தோழனைத் துன்னி
          இழுக்கா வியல்பி னொழுக்க மோம்பி
 
                (படையாளர் செயல்)
              1 - 7 :  பொரு..........ஓம்பி
 
(பொழிப்புரை) இவ்வாறு போர்புரிந்த இடபகன் படை மறவர் போரிற் பகைவரைக் கொல்லும் ஆற்றலுடைய உதயணனைக் காண்டற்குப் பெரிதும் விரும்பியவராய், அவனைச் சூழ்ந்துகொண்டு அவனுடைய தனிமைத்துயரத்தைத் துவரப் போக்கிக் கைகூப்பிக் காவல் செய்யாநிற்ப, வண்டுகள் மொய்த்த மலர்ந்த மாலையையுடைய வயந்தககுமரனும் அப்படைக் கெல்லாந் தலைவனாகிய இடபகனும் சென்று அக்குழுவினை எய்தி அக்குழுவின் நடுநின்ற கற்பகக் கனிபோன்று இனிய மொழிகளையுடைய வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு துன்பத்தோடு வந்து சேர்ந்த தோழனாகிய உதயணகுமரனை அணுகி, அவன்பால் தாம் செய்யவேண்டிய தவறாத இயல்பினையுடைய ஒழுக்க முறைகளை ஓம்பிச் செய்யாநிற்ப என்க.
 
(விளக்கம்) புகன்றனர் - விரும்பி. செம்மல்: உதயணன். செல்லல் - துன்பம். காப்பொடுபுரிய என்புழி ஒடு இசைநிறை, படலை - தளிர்விரவிய மலர்மாலை. தண்டத்தலைவன் : இடபகன். அக்குழுவினைத் தலைப்பெய்து என்க. கனிபடு கிளவி ; வாசவதத்தை. துனிவு - துன்பம். அஃது வழிவந்தமையால் உண்டானது என்க இழுக்கா வியல்பின் ஓழுக்கம் என்றது, அமைச்சர்கள் வேந்தனை அணுகுங்காற் செய்ய வேண்டிய வழிபாடு முதலியன என்க. உதயணன் உயிர்த்தோழனே யாயினும் "பழைய மெனக் கருதிப் பண்பல்ல செய்யுங், கெழுதகைமை கேடு தரும்" என்றும் "இளையரினமுறையர் என்றிகழார் நின்ற, ஒளியோ டொழுகப் படும்" எனவும் கூறப்படுதலான், மன்னரைச் சேர்ந்தொழுகுவோர் மன்னனைக் கடவுளாகவும் தம்மை மக்களாகவுமே கருதி மன்னனை அணுகுந்தோறும் வணக்கம் வாழத்து முதலியன செய்தல்வேண்டும். ஆகலின் 'இழுக்கா இயல்பின் ஒழுக்கம் ஓம்பி' என்றார்.