பக்கம் எண் :

பக்கம் எண்:590

உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
58. சயந்தி புக்கது
 
         
           விறற்படை சூழ விளங்குமணிப் பைம்பூண்
           மறப்படை நோன்றாள் வத்தவர் பெருமகன்
           போரகத் தெழுந்த பூசல் வினைஞர்
           மார்பகம் போழ்தலி னீரந் தீரா
     5     நெய்த்தோர்க் கச்சையி னித்திலம் போலச்
           செம்மை சேர்ந்த வெண்மைய வாகிய
           ஏந்தெழி லாகத் திறுவரைத் தாழ்ந்த
           பாந்த ளன்ன பரேரெறுழ்த் தடக்கையின்
           மிதிதோற் கொல்லன் பொதியுலைச் செந்தீத்
     10     ததர்வன போலச் சிதர்வன சிந்திப்
           புகரணிந் தோங்கிய நெற்றிப் பூங்கவுள்
           அயறசும் பிருந்த வந்த ணாற்றத்து
           மதக்களி சுவைக்கு மணிநிறப் பறவைத்
           தொகைத்தொழி லோப்புந் தகைச்செவிக் கேற்பப்
     15    பணைத்த வெருத்திற் பைங்கட் செயிர்நோக்
 
           (உதயணன் யானையூர்ந்து செல்லுதல்)
            1 - 15: விறற்படை..........எருத்தின்
 
(பொழிப்புரை) இவ்வாறு ஆற்றலமைந்த படைமறவர் சூழ, விளங்காநின்ற மணிபதித்த பசிய அணிகலன்களையும் மறமிக்க படைக்கலன்களையும், வலிய முயற்சியையுமுடைய வத்தவர் வேந்தனாகிய உதயணன் போர்க்களத்தே தனக்கெதிரே வந்த ஆரவாரமுடைய பகைமறவருடைய மார்பினைப் பிளத்தலாலே அம் மறவர் அணிந்திருந்த ஈரம்புலராத குருதியையுடைய கச்சையின் மேற் கிடக்கும் முத்துக்களைப் போன்று, சிவப்பும் வெண்மையும் விரவிய நிறமுடைய புகர்கள், மிதிக்கின்ற தோலையுடைய கொல்லன் கரிபொதிந்த உலைக்களத்தே சிவந்த நெருப்புப் பொறிகள் சிதறினாற் போன்று யாண்டும் சிந்திச் சிதறக்கிடந்து அழகு செய்யா நின்ற உயர்ந்த நெற்றியினையும், உயர்ந்த அழகிய உடலினையும், பெரிய மலையினின்றும் தூங்காநின்ற பாம்பு போன்று அவ்வுடலினின்றும் தூங்காநின்ற வலினையுடைய பரிய பெரிய துதிக்கையினையும், அழகிய கவுளையும் அக்கவுளிடத்தவாகிய புண்வழலை துளித்தலமைந்த அழகிய குளிரந்த நறுமணமுடைய மதச்சேற்றினைச் சுவைக்கின்ற நீலமணி போலு நிறமுடைய அறுகாற் சிறு பறவைகளாகிய வண்டினங்களை ஓட்டுகின்ற தொழிலையுடைய அழகிய செவிகளையும், அச்செவிகட்கேற்ற பருத்த எருத்தினையும் என்க.
 
(விளக்கம்) நோன்றாள் - வலிய முயற்சி. மறப்படை - படைக்கலம். பெருமகன் வினைஞர் மார்பகம் போழ்தலின் ஈரந்தீராக் கச்சையின் நித்திலம் என உதயணனை எழுவாயாக்குக. நெய்த்தோர் - குருதி. நித்திலம் - முத்து. குருதியிற்றோய்ந்த முத்துக்கள் யானையின் புகர்கட்கு உவமை. முத்துக்கள் குருதியிற்றோய்தற்குக் காரணங் கூறுமாற்றானே காப்பியத்தலைவனின் மறப்பண்பைச் சிறப்பித்தபடியாம். செம்மை சேர்ந்த வெண்மையாகிய புகர் என்றும், உலைச் செந்தீத் ததர்வன போலச் சிந்திச் சிதர்வனவாகிய புகர் என்றும் தனித்தனி கூட்டுக. ஆகம் - உடல். பருமை+ஏர் - பரேர் எனப் புணர்ந்தன. எறுழ் - வலிமை. ததர்வன - சிதறுவன. புகர் - புள்ளி. புகரான் அழகுறுத்தப்பட்டு ஓங்கிய நெற்றி என்க. அயறு - புண்வழலை. மதக்களி - மதக்குழம்பு. மணி - நீலமணி: பறவை - வண்டு. ஓம்புந் தொழிற் செவி என மாறுக. எருத்து - பிடர்.