பக்கம் எண் :

பக்கம் எண்:616

உரை
 
2. இலாவாண காண்டம்
 
1. நகர் கண்டது
 
         
    85     மற்றும் இன்னன பற்பல பயிற்றி
           மகளிரும் மைந்தரும் புகழ்வனர் எதிர்கொள
           அமரர் பதிபுகும் இந்திரன் போலத்
           தமர்நகர் புக்கனன் தானையிற் பொலிந்தென்.
 
        85 - 88 ;  மற்றும் இன்னன,.,,,,தானையிற் பொலிந்தென்
 
(பொழிப்புரை) அச் சயந்தி நகரத்து மகளிரும் மைந்தரும் இத்தகையனவாகிய பாராட்டுரை பற்பல பன்முறையும் மொழிந்து எதிர்கொள்ளா நிற்ப, உதயணண் வாசவதத்தையோடு தன் உறவினர் நகரமாகிய அச் சயந்தியின்கண்ணே, படைவீரர் பலர் சூழப் பொலிவுற்றுத் தனது தலைநகரமாகிய அமராவதி யின்கண் வானவர் எதிர்கொள்ளப் புகும் இந்திரனைப் போலப் புகுந்து வதிந்தனன் என்க.
 
(விளக்கம்) 85. மற்றும்-மேலும்; அன்றி அசையாக்கலுமாம். இன்னன - இவைபோல்வனவாகிய பாராட்டுரைகள்.பயிற்றுதல்-பன்முறையும் கூறுதல்.
    86. மகளிரும் மைந்தரும் ; எண்ணும்மை. புகழ்வனர் ; முற்றெச்சம். புகழ்ந்து என்க
    87. வானவாரலே எதிர்கொள்ளப்பட்டுத் தன் நகராகிய அமராவதியிற் புகும் இந்திரன்போல என்க.
    88. தமர்-தம்மவர்; உறவினர். நகர் - நகரம், நாளுக்குநாள்  விரிந்து இடனாவது என்பது பொருள், புக்கனன்-புகுந்தனன்; சேர்ந்தனன். புகு என்னும் பகுதியடியாகப் பிறந்த வினைப்பெயர்; ஈண்டுத் தன்னொற்றிரட்டி இறந்தகாலங் காட்டிற்று. தானை - படை வீரர்; அன்றி நால்வகைப் படைப்பெருக்கமுமாம்,

                  1. நகர்கண்டது முற்றிற்று,