பக்கம் எண் :

பக்கம் எண்:617

உரை
 
2. இலாவாண காண்டம்
 
2, கடிக்கம்பலை
 
          பொலிந்த சும்மையொடு பொன்னணி மூதூர்
          மலிந்தகம் புக்கபின் மண்பொறை கூரப்
          பெறலரும் பெருங்கிளை இறைகொண் டீண்டி
          இன்மகிழ் இருக்கை ஏயர் மகனொடு
     5    தண்மகிழ் நெடுங்குழல் தத்தொளித் தாமத்து
          மதிக்கவின் அழித்த மாசறு திருமுகத்
          தணிக்கவின் கொண்ட ஐயரித் தடங்கண்
          வனப்புவீற் றிருந்த வாசவ தத்தை
          வதுவைச் செல்வம் விதியிற் கூறுவென்  
 
        1-9 ; பொலிந்த சும்மையொடு..,..,..விதியிற் கூறுவென்
             ( 1 முதல் 9 வரை புலவர் கூற்று,)
 
(பொழிப்புரை)   இங்ஙனமாக ஆரவாரத்தோடு  உதயணன் வாசவதத்தையோடு சயந்தியின்கண் மகிழ்ச்சிவிக்குப் புகுந்த பின்னர், அவன் பெருங்கேளிர் நிலஞ்சுமக்கலாற்றாதபடி வந்து குழுமி உரையாநிற்ப, ஏயர் மரபினனாகிய அவ் வுதயணனுக்கும், குழல் முதலியவற்றையுடைய வாசவதத்தைக்கும் நிகழ்ந்த திருமணவிழாவின்பத்தை நூன்முறையானே கூறுவேன் கேண்மின்; என்று கொங்குவேளிர் கூறுகின்றார் என்க,
 
(விளக்கம்) இது நுதலிப்புகுதல் என்னும் உத்தி.
    1.சும்மையொடு பொன் அணிபொலிந்த மூதூர் அகம் மலிந்து புக்கபின் என இயைத்துக்கொள்க. சும்மை-ஆரவாரம், பொன் முதலியவற்றால் ஒப்பனை செய்யப்பட்ட மூதூர் என்க, மூதூர் - ஈண்டுச் சயந்தி 
    2.அகத்தின்கண் மகிழ்ச்சி மலிந்து என்க. மண் - நிலம். பொறை - சுமை.
    3. பெருங்கிளை - மிகுந்த உறவினர், இறைகொண்டு - தங்கி - ஈண்டு இறை கொள்ளாநிற்ப என்க,
    4.இன்மகிழ் இருக்கை - இனிய மகிழ்ச்சிக்குக் காரணமான இருக்கை. ஏயர்மகன் - ஏயர் குலத் தோன்றலாகிய உதயணன்.
    5. தண்மகிழ் - குளிர்ந்த மகிழமலர் (மாலையினையுடைய, ஒளிதத்துதாமம் என மாறுக. ஒளிதாவும் பொன்மாலையும் மணிமாலையும் என்க. மாசின்மையானே மதியின் கவினை அழித்த திருமுகம் என்க.
    6. மதி-திங்கள். 7. திருமுகத்து அழகிற்கு மேலும் ,அழகாந்தன்மையுடைய கண்; "வனப்பின்மேலும் வனப்புடைத்தாகி " என்பர் மேலும், (மகத - 12 ; 63.)
    7. ஐ - மென்மை, அரி-செவ்வரி. தடங்கண் - பெரிய கண்.
    8. வனப்பு - உறுப்பெல்லாம் திரண்டவழி உண்டாவதோர் அழகு. வீற்றிருத்தலாவது, அழிவின்றி நிலைபெறுதல்.
    9. வதுவைச்செல்வம்-திருமணவின்பம். வீதி- நூன்முறை கேண்மின் என்பது சொல்லெச்சம்.