உரை |
|
1. உஞ்சைக்காண்டம் |
|
35. நருமதை சம்பந்தம் |
|
பல்வேன் முற்றம் பணியிற்
போகி நகர்முழு
தறிய நாணிகந்
தொரீஇ ஒருவன்
பாங்க ருளம்வைத்
தொழுகும் அதன்மி
யாரென வாங்கவன் வினவ 70
இரங்குபொற் கிண்கிணி யிளையோர்
நடுவண் அரங்கியன்
மகளிர்க் காடல்
வகுக்கும்
தலைக்கோற் பெண்டிருட் டவ்வை
யொருமகள் நாடகக்
கணிகை நருமதை
யென்னும் பாவை
யாகுமிப் பழிபடு துணையென
|
|
(வயந்தகன்
செயல்) 66 - 74:
பல்வேல்..........துணையென
|
|
(பொழிப்புரை) அப்பணிமேற்
கொண்ட வயந்தகன் வேன்மறவர் பலர் புடை சூழப் பரத்தையர் சேரிக்கட்
சென்று அந்த உஞ்சை நகரத்தே வாழ்கின்ற மாந்தரெல்லாம் அறியும்படி
இச்சேரியில் பலரையும் விரும்புதலன்றி நாணமின்றி ஒருவன்பாலே நெஞ்சை
நிறுத்தி அறங்கடை நிற்கும் பரத்தை, யார்? அறிவீரேற் கூறுமின்! என்று
அச்சேரியில் எதிர்வருவோரை யெல்லாம் வினவா நிற்ப, அது கேட்டவருள்
சிலர் நீயிர் கூறும் பழியுண்டாகுமளவு அவ்வாறே ஒழுகும் பரத்தை ஒருத்தியுளள்;
அவள் யாரெனின் ஒலிக்கின்ற பொன் கிண்கிணி கட்டிய இளமையுடைய பரத்தை
மகளிருள் வைத்துக் கூத்தாட்டவைக்கண் ஏறி ஆடும் கூத்தியர்க்கு ஆடல்
கற்பிக்கும் ஆடலாசிரியையும் 'தலைக்கோல்' என்னும் பட்டம் பெற்ற
கூத்தியருள் வைத்து முதன்மையுடையாள் ஒருத்தியும் ஆகிய 'நருமதை' என்னும்
நாடகக் கணிகையே என்று கூறா நிற்ப என்க.
|
|
(விளக்கம்) பல்வேல்
சுற்றம் புடைசூழ என ஒரு சொல் வருவிக்க. யாவரேயாயினும்
அன்றைவைகல் சென்றோர்ப் பேணிப் பள்ளி மருங்கிற் படிறின்று ஒழுகுதலே
பரத்தை மகளிர்க்கு அறமாம். அங்ஙனமின்றி ஒருவன் பாங்கர் உளம்வைத்
தொழுகுதல் அவர்க்கு அதர்மம் என்பது கருத்து. இதனை,
|
"நிறையிற் காத்துப் பிறர்பிறர்க் காணாது
கொண்டோ னல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர்தங் குடியிற் பிறந்தா ளல்லள் ஆடவர்
காண நல்லரங் கேறி யாடலும் பாடலும் அழகுங் காட்டி
கண்டோர் நெஞ்சங் கொண்டகம் புக்கும்
பண்டேர் மொழியிற் பயன்பல வாங்கி வண்டிற்
றுறக்குங் கொண்டி மகளிர்"
..........
எனவரும் சித்திராபதி கூற்றினும் (மணிமே - 18 : 10 - 4) காண்க.
அரங்கியன் மகளிர் - விறலியர். தலைக்கோல் - ஒரு பட்டம். இப்பழி
படுதுணை யொழுகுவாள் நருமதை என்னும் பாவையாகும் என மாறுக. தவ்வையாகிய
ஒருத்தியும் என்க. ஒருமகள் - ஒருத்தி. பாவை என்றது - பரத்தை
என்னுமாத்திரையாய் நின்றது.
|