பக்கம் எண் :

பக்கம் எண்:734

உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
            ஒருபுடை அல்ல துட்குவரு செங்கோல்
           இருபுடை பெயரா ஏயர் பெருமகன்
     50    சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில்
           உதயண குமரன் வதுவைக் கணிந்த
           கோலங் கொண்ட கோல்வளை மகளிருள்
           ஞாலந் திரியா நன்னிறைத் திண்கோள்
           உத்தம மகளிர் ஒழிய மற்றைக்
     55    கன்னியர் எல்லாங் காமன் துரந்த
 
        48- 55 ; ஒருபுடை.,.,.,,கன்னியர் எல்லாம்
 
(பொழிப்புரை) அறத்தின் பக்கமாகிய ஒரு பக்கத்திலே பெயர்வதன்றிப் பிறழ்ந்து அறமறமாகிய இருபக்கத்தினும் பெயர் தலில்லாத செங்கோன்மையையுடைய ஏயர் கால்வழித்தோன்றலும், தொடங்கிய பின்னர்க் கெட்டொழியும் ஆள்வினையை மேற்கொள்ளாதவனு மாகிய உதயணகுமரன் மணவிழாவின் பொருட்டு ஒப்பனை செய்துகொண்ட மகளிருள் பிறழாத நிறையினையும் கற்புடைமையையும் உடைய குலமகளிரல்லாத ஏனைக் கன்னியர் எல்லாம் என்க.
 
(விளக்கம்) 48. ஒருபுடை-அறத்தினது பக்கம்.
    49 இருபுடை-அறமறமாகிய இரண்டு பக்கத்தினும்- ஏயர்மரபிற் றோன்றியவனாகிய என்க,
    50. சிதை பொருள்-இடையிலே முறிந்துகெடும் ஆள்வினை.
     
      'தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
     இடங்கண்ட பின்னல் லது'  (திருக் - 491)
  எனவும்,
       'உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
     இடைக்கண் முரிந்தார் பலர்'   (திருக் - 473)

எனவும், இன்னோரன்னபிறவும் அரசியலறமாகலின் அவ்வறத்திற் றவிராதான் என்பார் 'சிதைபொருள் வலியாச் செறிவுடைச் செய்தொழில் உதயணகுமரன்' என்றார்.
    53. ஞாலந் திரியா-உலகின்கட் பிறழ்தலில்லாத. இனிஞாலந் திரியினும் திரியாத நிறை என ஒருசொற் பெய்துரைப்பினும் ஆம்.
     'நிலம்புடை பெயரினும் விசும்புவந் திழியினும், கலங்காக் கடவுட் கற்பு' என்றிவ்வாசிரியரே (இலா-17, 139 -40) கூறுதல் உணர்க, இனி வள்ளுவனார்,
       'ஊழி பெயரினுந் தாம்பெயரார் சான்றாண்மைக்
       காழி எனப்படு வார்'                 (திருக் - 189)

என்றோதுதலும் உணர்க
     திண்கோள்- திண்ணிய கொள்கை, அஃதாவது கற்புடைமை; 'கற்பென்னும் திண்மை' என்பது வள்ளுவர் மெய்ம்மொழி. (திருக் - 54.)
    54. உத்தம மகளிர் என்றது குலமகளிராகிய கன்னியரை.