பக்கம் எண் :

பக்கம் எண்:740

உரை
 
2. இலாவாண காண்டம்
 
7. நகர்வலங் கொண்டது
 
           மீட்டல் செல்லா வேட்ட விருப்பொடு
           கோடுகொள் மயிலின் குழாஅம் ஏய்ப்ப
           மாடந் தோறு மலிந்திறை கொண்டனர்
 
              92-94: மீட்டல்................கொண்டனர
 
(பொழிப்புரை) மீட்பதற்கியலாத வேணவாவோடு மலைச்சிகரங்களிலே ஏறிய மயிற்கூட்டம் போல மாடமாளிகை தோறும்மிக்குக் கூடித் தங்காநின்றனர் என்க.
 
(விளக்கம்) பூங்குழை மகளிர் உதயணகுமரன் இரப்ப எய்தும் இன்சுவை அமிர்தம் புணரும்படி கூடப் பெறின் போகமும் இனிதே என்று கூறி வேணவாவோடு மாடங்களின் மிசை மயிற்குழாம் போலக் கூடியிருந்தனர் என்க,
    92, மீட்டல் செல்லா -அவன்பால் செல்லும் மனத்தை மீட்கமாட்டாமைக்குக் காரணமான ( விருப்பம்) என்க.
    93. கோடு - மலைச்சிகரம். ஏய்ப்ப - ஒப்ப,
    94. மலிந்து-மிக்கு, இறைகொண்டனர் -தங்கினர்.