பக்கம் எண் :

பக்கம் எண்:749

உரை
 
2. இலாவாண காண்டம்
 
8. யூகி போதரவு
 
          போகம் புணர்ந்த பொன்னகர் அவ்வயின்
          வேகத் தானை வேந்தன் மகளோ   
          டேகச் செங்கோல் ஏயர் பெருமகன்      
          போகங் கழுமிப் புணர்ந்து விளையாட
     5    யூகிக் கிப்பால் உற்றது கூறுவென்
 
        1 - 5 ; போகம்...........கூறுவென
 
(பொழிப்புரை) இவ்வாறு இன்பநுகர்ச்சி பொருந்துதற்கு இடமான அழகிய அச் சயந்திநகரத்தின்கண் சினமிக்க படையினையுடைய அப்பிரச்சோதன மன்னன் மகளாகிய வாசவதத்தையோடு தனிச் செங்கோலையுடைய ஏயர்குலத் தோன்றலாகிய உதயணகுமரன் இன்பம். நிறையப் பெற்றுக் கூடி விளையாடா நிற்ப, இனி யூகி என்னும் அமைச்சனுக்கு நிகழ்ந்ததனைக் கூறுவேன் கேண்மின் (என்று கொங்குவேளிர் கூறுகின்றார்) என்க.
 
(விளக்கம்) 1. போகம் - துகர்ச்சி, புணர்தற்கு இடனாயிருந்த அப் பொன்னகர்வயின் என்க. நகர்- சயந்தி.
   2. வேகத்தானை-சினமுடைய படை. வேந்தன்: பிரச்சோதனன். மகள் - வாசவதத்தை.
   3. ஏகச் செங்கோல் - தனிச் செங்கோல்; என்றது, உலகினைப் பொதுக் கடிந்து செலுத்தும் ஒற்றைச் செங்கோல் என்றவாறு.
   4. கழுமி-நிறைந்து,
   5. யூகி- உதயணகுமரனுடைய முதலமைச்சன்,