பக்கம் எண் :

பக்கம் எண்:775

உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
          தன்தொழில் துணியாது தானத்தின் வழீஇக்
          குஞ்சர வேட்டத்துக் கோள்இழுக் குற்ற
          வெஞ்சின வேந்தனை விடுத்தல் வேண்டி
          வஞ்ச இறுதி நெஞ்சுணத் தேற்றி
    40    உஞ்சையம் பெரும்பதி ஒளிக்களம் புக்கு
          மெய்ப்பேய்ப் படிவமொடு பொய்ப்பேய் ஆகிப்
          பல்லுயிர் மடிந்த நள்ளென் யாமத்துக்
          கூற்றுறழ் வேழங் குணஞ்சிதைந்  தழி்யச்
          சீற்ற வெம்புகை செருக்க வூட்டிக்
    45    கலக்கிய காலை
 
        36-45; தன்றொழில்......கலக்கிய காலை
 
(பொழிப்புரை)  தனக்குரிய தொழிலை இயற்றாமல் தன திடத்தினின்றும் வழுவி யானைவேட்ட மாடியதனாலே சிறைப்பட்ட நம் வேந்தனைச் சிறைவீடு செய்தலை விரும்பிப் பொய்யான சாச்செய்தியைப் பிறர் நெஞ்சங் கொள்ளும்படி தெளியச்செய்து, உச்சயினி நகரத்தின்கண் மறைவிடத்திலே புகுந்திருந்து பேய் வடிவங்கொண்டு நள்ளிரவிலே நளகிரி என்னும் களிற்றியானை குணங் கெட்டழியும்படி சினமுண்டாக்கும் வெவ்வியதொரு மருத்துப்புகையை அது மயங்கும்படி ஊட்டி யான் அதனைக் கலக்கியபொழுது என்க.
 
(விளக்கம்) 39. தன்தொழில்-வேந்தனாகிய தனக்குரிய காவற்றொழில். தானம்-தனக்குரிய பதவி. வழீஇ-வழுவி ; தவறி.
    37. குஞ்சரம்-யானை, வேட்டத்து - வேட்டமாடுதலின்கண். கோள் - தன்கொள்கை; சிறைகொள்ளப் படுதலாகிய இழுக்கினை உற்ற எனினுமாம். இழுக்குற்ற - பிழைத்துச் சிறைப்பட்ட.
    38, வேந்தன்: உதயண குமரன். விடுத்தல்-சிறைவீடு செய்தல்
    39. வஞ்ச இறுதி - பொய்ச்சாக்காடு, நெஞ்சுண - நெஞ்சங் கொள்ளும்படி     
    40. ஒளிக்களம்-மறைவிடம்; என்றது. உச்சயினியின் புறத்தே ஓர் ஊரின் கண் தான் மறைந்து வதிந்த பாழ்வீட்டினை,
    41. மெய்ப்பேயின் வடிவம்போலத் தோன்றுவதாகிய பொய்ப் பேய்வடிவம் கொண்டென்க,
    42. மடிந்த.-உறங்கிய. நள்ளென் யாமம் - நள்ளிரவு; இடையாமம்.  ;நள்ளென் ; ஒலிக்குறிப்பு,
    43. கூற்றுறழ் வேழம் - மறலியை ஒத்த யானை. அஃதாவது நளகிரி என்னும் களிறு. குணம் - நற்பண்பு.
    44. சீற்றத்தை உன்டாக்கும் வெவ்விய மருத்துப்புகை என்க. செருக்க -மயங்க.