பக்கம் எண் :

பக்கம் எண்:783

உரை
 
2. இலாவாண காண்டம்
 
9. யூகி சாக்காடு
 
         
    110    வேறல் செய்கை வேந்தற் குண்மை
          தேறன் மாக்களைத் திறவிதிற் காட்டிப்
          பழந்தீர் மரவயிற் பறவை போலச்
          செழும்பல் யாணர்ச் சேனைபின் ஒழிய
          நம்பதிப் புகுதரக் கங்குற் போத்தந்
    115    தியான்பின் போந்தனன் இதுவென அவன்வயின்
          ஓங்கிய பெரும்புகழ் யூகி மேனாள்
          பட்ட எல்லாம் பெட்டாங் குரைப்ப
 
        110 - 117 ; வேறல்......உரைப்ப
 
(பொழிப்புரை)  இன்னும் வெற்றி செய்தற் றொழில் உதயண குமரனுக்கு இருத்தலை நமர்களுக்கு உணர்த்தி அவர்களைப் பழந்தீர்ந்துபோன மரத்தினின்றும் தஞ்சேக்கைக்குப் போகும் வௌவால்களைப் போல இரவின்கண் நம்மூர்க்குப் போக்கி அவர் சென்ற பின்னர் யானும் வந்தேன் என்று முன்னாளில் நிகழ்ந்தவற்றை எல்லாம் யூகி இடபகனுக்கு விரும்பிக் கூற என்க.
 
(விளக்கம்) 110, இனி நம் வேந்தன் ஆருணி முதலிய அரசரொடு போர் செய்து அவரை வெல்லுங் கடமை உளனாயிருத்தலை நம் படைஞர்க்குக் கூறி என்பது கருத்து.
    111, தேறல் மாக்கள் - தன்னாற் றெளியப்பட்ட தமது படை வீரர். திறவிதில் - செவ்விதாக, காட்டி - உணர்த்தி.
    112. வினைமுற்றித் தம்மூர்க்கு மீளும் படைஞர்க்குப் பழந் தீர்ந்தபின் அம்மரத்தை விட்டுத் தஞ்சேக்கைக்குப் போகும் வௌவால் உவமை
      'கனிவளங் கவர்ந்து பதிவயிற் பெயரும்
       பனியிறை வாவற் படர்ச்சி எய்ப்ப' ( 2 ; 2 - 119 ; 20 )
என்றார் முன்னும்.
    113. செழிப்புடைய பலவாகிய புதுவருவாயினையுடைய சேனை என்க.
    114. போத்தந்து - போக்கி.
    115. இதுவென -இந்நிகழ்ச்சி முன்னிகழ்ந்தது என்று. அவன்வயின் - அவ்விடபகன்பால்.