பக்கம் எண் :

பக்கம் எண்:840

உரை
 
2. இலாவாண காண்டம்
 
11. அவலந் தீர்ந்தது
 
         அவ்வழி மற்றுநீ வளர இவ்வழிப்
   150   பட்டதை அறியான் பயநிலங் காவலன்
        கட்டழல் எவ்வமொடு கடவுளை வினவக்
        கடும்புள் எதிர்ந்து காட்டகத் திட்டதூஉம்
        நெடுந்தோள் அரிவை நின்னைப் பெற்றதூஉம்
        தகையுடை முனிவன் தலைப்பட் டதூஉம்
   155   வகையுடை நல்யாழ் வரத்திற் பெற்றதூஉம்
        விசையுடை வேழம் வணக்கும் விச்சையும்
        மாமன் கொண்டுதன் மாணகர் புக்கதூஉம்
        ஏயர்க் கிறையென இயற்றிய வண்ணமும்
 
        [தேவியைப் பிரித்த சதானிகன் செயல்]
     148 - 157 : இவ்வழி,,,,,,.,,,..,இயற்றியவண்ணமும்
 
(பொழிப்புரை) இனி இப்பாற் கோசம்பி நகரத்தின்கண் சதானிக மன்னன் தன் மனைவிக்கு நேர்ந்தது யாதென்று அறியாதவனாய்த் தீப்போன்ற கொடிய துன்பத்தோடே ஒரு துறவியைக்கண்டு தன் மனைவியைப்பற்றி வினவாநிற்ப; அத் துறவி மிருகாபதியைச் சிம்புளொன்று கண்டு ஊன்குவை எனக்கருதி எடுத்துச் சென்று காட்டிக்கண் வைத்துச் சென்றதும், அக் காட்டில் கோப்பெருந் தேவியார் பெருமானே! நின்னைப் பெற்றதும், அங்கே சேடக முனிவன் தேவியாரைக் கண்டதும், நீ பிரமசுந்தர முனிவன்பால் வரத்தினாலே தெய்வ யாழையும், சினமிக்க யானையை அடக்கும் வித்தையையும் பெற்றதும், அவ்வழி வந்த நின் மாமன் நின்னை அழைத்துக்கொண்டு தனது மாண்புடைய வைசாலி நகரத்திற்குச் சென்றதும், அந்நகரத் தின்கண் நின்னை அரசனாக்கி வைத்ததும் என்க
 
(விளக்கம்) 148. இவ்வழி - இங்கே கோசம்பி நகரத்திலே என்க.
    149, பட்டதை - நிகழ்ந்ததனை. பயநிலங் காவலன் -  பயன்மிக்க உலகினைக் காக்கும் சதானிக மன்னன்.
    150. கட்டழல் எவ்வம் - நெருப்புப் போன்ற துன்பம.் கடவுள் -  துறவி.
    151. கடும்புள்-சிம்புள். இதனை எண்காற்புள் என்றும் கூறுப. 151. நெடிய தோளையுடைய மிருகாபதி,
    153. தகையுடை முனிவன் -பெருந்தகைமையுடைய சேடக முனிவன்.
    155. விசை - வேகம். சினம் : வெறியுமாம். விச்சை - வித்தை; மந்திரம்.
    156. மாமன் - நின் மாமனாகிய விக்கிர வேந்தன். மாண்நகர் - மாண்புடைய வைசாலி நகரம்.