பக்கம் எண் :

பக்கம் எண்:844

உரை
 
2. இலாவாண காண்டம்
 
12. மாசன மகிழ்ந்தது
 
          ஓசை போக்கிய பின்றை ஓவா
          மாசில்சிறப்பின் வான்பூத் தன்ன
          நகரம் வறுவி தாகநாட் கொண்டு
          தகரங் கமழுந் தண்வரைச் சாரல்
     5    தக்கோர் உறையுந் தாபதப் பள்ளியும்
          கற்றோர் உறையுங் கடவுள் தானமும்
          புக்கோர் புறப்படல் உறாஅப் பொலிவின்
          சுனையும் யாறும் இனையவை மல்கி
          மேவர அமைத்த மேதகு வனப்பின்
     10    கோலக் கோயிலொடு குரம்பை கூடிப்
 
        1- 10 ; ஓசை........குரம்பைகூடி
 
(பொழிப்புரை) இங்ஙனம் தோழர் முரசறைவித்த பின்னர்த் தேவருலகம் போன்ற பொலிவினையுடையதும், குற்றமற்றதும், சிறப்பினையுடையதும் ஆகிய அச்சயந்தி நகரம் வறிதாகிக் கிடக்கும்படி (38) அங்குறையும் மகளிரும் மைந்தரும், நல்ல முழுத்தத்திலே புறபபட்டுத் தகரமணங் கமழாநின்ற குளிர்ந்த மலைச்சாரலிலே, சுனைகளும், யாறுகளும் மிக்க விடத்தில் துறவியர் உறையும் தவப்பள்ளியும், கற்றோர் உரையும் திருக்கோயில்களும் ஆகிய இவற்றோடு, கண்டோர்க்கு விருப்பம் வருமாறு சிறந்த அழகோடே அமைக்கப்பட்ட அரண்மனையினும் குடில்களினும் சென்று குழுமி என்க.
 
(விளக்கம்) 1. முதலாக 34. ஈறாக நாலாசிரியர் நுதலிப்புகுதல் என்னும் உத்தியாலே தங்கூற்றாகக் கூறுகின்றார்.
    1. ஓசை-செய்தி. ஓவாச்சிறப்பு, மாசுஇல் சிறப்பு எனத்தனித்தனி கூட்டுக, ஓவா -ஒழியாத.
    2, வான் ; ஆகுபெயர்; தேவர் நகரம். பூத்தன்ன - பொலிவுற்றாற்போன்ற என்க.
    3 நகரம்- சயந்திநகரம். வறுவிது - வறுமையுடையது. அந்நகரத்துள்ள சான்றோர் அரசன் முதலிய அனைவரும் அதனைவிட்டுப் போதலின் அது வறுமையுற என்பது கருத்து. நாள் - நல்ல முழுத்தம்.
    4. தகரம் - ஒருவகை மணமுடைய மரம், தண்வரைச் சாரல் - குளிர்ச்கியுடைய மலைச்சாரல்.
    5. தக்கோர் - துறவியர், தாபதப்பள்ளி் - துறவியர் உறையும் இடம்.
    6. கடவுள்தானம் - கோயில், கடவுட்டன்மை யுடைய தீர்த்தங்களமைந்த இடங்களுமாம்.
    7. தம் பாற்புகுந்தோர் மீண்டுபோக நினையாமைக்குக் காரணமான பொலிவினையுடைய சுனைகளும் யாறுமாகிய இவை செறிந்த இடத்திலே என்க
    9. மேவர-கண்டோர்க்கு விருப்பமுண்டாகும்படி. மேதகு வனப்பு - மேன்மை தக்கிருந்த அழகு,
    10. கோலம்-ஒப்பனையழகு. கோயில் - அரசன் தங்குதற்கமைந்த பட வீடு, குரம்பை- குடில்; என்றது ஏனையோர் உறைதற்குரிய பட வீடுகளை,