பக்கம் எண் :

பக்கம் எண்:858

உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          மைந்தரு மகளிரு மலைவயின் ஆடி       
          வெந்திறல் வேந்தன் வீழ்பவை காட்டி
          ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும்
          கண்ணுறக் கவவிக் கலந்து விடாஅ
     5    அருமைக் கொத்த அஞ்சுவரு காப்பின்
          உரிமைச் சுற்றம் பின்பட உய்த்துத்
          தீதற எறியுந் தெரிபொருட் கேள்வி
          மூதறி முனிவன் பள்ளி முன்னர்
 
        1 - 8 : மைந்தரும்................முன்னர்
 
(பொழிப்புரை) இங்ஙனமாகக் காட்டின்கண் மணத்துவிளையாடா நின்ற மைந்தரும் மகளிரும் வெவ்விய ஆற்றலுடைய தம் மன்னனாகிய உதயண குமரன் விரும்பும் காட்சிகளைக்காட்டி மகிழ்விப்பப் பின்னர், அவ்வுதயணகுமரன்  தன் ஐம்பெருங் குழுவினரும் எண்பேராயத்தினரும் நெருங்கிச், குழ்ந்து அகலாமல் காக்கும், கண்டோர்க்கு அச்சம் வருவதற்குக் காரணமான பாதுகாவலையுடைய உரிமைச் சுற்றத்து மகளிரைத்  தனக்குப் பின்னாகச் செலுத்தி அவ்விடத்தே அமைந்ததொரு முனிவனுடைய தவப்பள்ளியின் முன்னிடத்தே உள்ளதும், என்க..
 
(விளக்கம்) (8) பள்ளி முன்னர் (உள்ளதும் 28-9) கயமரம் (இல்லாததும் ஆகியதோர்) காவினுள் இரீஇ காவல் போற்றி எனச்சென்று இயையும்.      
    1, மலைவயின் - அம்மலைச்சாரலிடத்தே.
    2. வெந்திறல் - வெவ்விய ஆற்றல். வேந்தன் ;  உதயணகுமரன். வீழ்பவை - விரும்புவனவற்றை.    
    3., ஐம்பெருங்குழு - 'அமைச்சர் புரோகிதர் சேனாபதியர், தவாத் தொழிற் றூதுவர், சாரணர் என்றிவர், பார்த்திபர்க் கைம்பெருங் குழுவெனப் படுமே,'     
    3. எண் பேராயம் - 'கரணத் தியலவர் கருமகாரர் கனகச்சுற்றங் கடைகாப்பாளர் நகரமாந்தர் நளிபடைத் தலைவர், யானை வீரர் இவுளி மறவர் இனையர் எண்பேராயம் என்ப' இவை சிலப்பதிகாரத்தில் (5; 157 -60) அடியார்க்கு நல்லார் உரை மேற்கோள்கள். இனி அந்நூலின் அருபதவுரையாசிரியர்,      
        'சாந்துபூக் கச்சாடை பாக்கிலை கஞ்சுகநெய்
        ஆய்ந்த இவரெண்மர் ஆயத்தார்-வேந்தர்க்கு
        மாசனம் பார்ப்பார் மருத்தர்வா னிமித்தரோ
        டாசில் அவைக்களத்தார் ஐந்து'
  எனக் காட்டுவர்,
    4. கவவி - சூழ்ந்து. விடாஅ - விடாத.
    5, அருமைக்கு ஒத்த - அருமையுடையதாக மதித்துப் பேணத் தகுந்த. அஞ்சு - அச்சம், காப்பின் -காவலையுடைய.
    6. உரிமைச் சுற்றம் - உவளக மகளிர் (அந்தப்புரத்து மகளிர்). உய்த்து - செலுத்தி
    7. தீது - காதிகர்மம். இவை உயிர்ப்பண்புகளைக் கொல்லுதல் பற்றித் தீது எனப்பட்டன. அவையாவன ; ஞானவரணியம் தரிசனாவரணீயம் மோகனீயம் வேதனீயம் என்பன.இவற்றை,        
         ' பாலனைய சிந்தை சுடரப் படர்செய் காதி
           நாலுமுட னேயறிந்து'

  எனவரும் சீவக சிந்தாமணியானும் (3062) உணர்க,
    தெரிபொருள் கேள்வி  மூது அறிமுனிவன் - ஆராய்ந்தறியும் பொருட் கேள்வியானே உணரப்படும் பழம்பொருளை அறிந்த முனிவன் என்க, மெய்யுணர்ந்தோன் என்பது கருத்து.
    8, பள்ளி - தவக்குடில்.
    9 - 29 இனி இடைப்பிறவரலாக அத்தவப் பள்ளியின் முன்னுள்ள அப் பொழிலின் மாண்பு கூறுகின்றார்.