பக்கம் எண் :

பக்கம் எண்:868

உரை
 
2. இலாவாண காண்டம்
 
13. குறிக்கோள் கேட்டது
 
          தக்கது மன்ற மிக்கோன் கூற்றென
          நட்புடைத் தோழனை நண்ணி அன்னதோர்
          உட்புகன் றெழுதரும் உவகையன் ஆகிப்
     75   பள்ளி மருங்குல் பாவங் கழீஇ
          வள்ளி மருங்கில் வாசவ தத்தையைக்
          கூடுதல் ஆனாக் குறிப்புமுந் துறீஇ
          ஆடுதல் ஊற்றமொ டமர்ந்தனன் உவந்தென்
 
          ( உதயணன் மகிழ்தல் )
          72 - 78 ; தக்கது.,.....உவந்தென்
 
(பொழிப்புரை) அதுகேட்ட உதயணகுமரண் இப்பெரியோர் மொழி நிச்சயமாக மெய்ம்மையுடைத்து என்று கருதி யூகியைக்கண்டாற்போன்று உவகை எய்தியவனாய் அம்முனிவனைக் கண்டபுண்ணியத்தானே அத்தவப்பள்ளியிலேயே தன் பாவங்களைக் கழித்து அவணின்றும் சென்று கொடியிடையினையுடைய வாசவதத்தையைக் காண்டற்கு விரும்புமோர் அமையாத விருப்பத்தோடு மீண்டும் அவளோடு விளையாடும் முயற்சியின் கண் தலைப்பட்டான் என்க.
 
(விளக்கம்) 72. தக்கது - தகுதியுடையது;என்றது மெய்ம்மையுடையதென்றவாறு. மன்ற - நிச்சயமாக.
    73; தோழன் ; யூகி.
    74. உள்ளத்துள் விரும்புதலானே எழாநின்ற மகிழ்ச்சி என்க.
    75. முனிவரைக் கண்ட புண்ணியத்தானே பாவைத்தைப்போக்கி
என்க.
    76. வள்ளி மருங்குல் - கொடிபோன்ற இடை.
    77. ஆனா - அமையாத. முந்துறீஇ - முந்துற்று.
    78, ஊற்றம் - முயற்சி.


                  13. குறிக்கோள் கேட்டது முற்றிற்று.