பக்கம் எண் :

பக்கம் எண்:931

உரை
 
2. இலாவாண காண்டம்
 
19. தேவிக்கு விலாவித்தது
 
          ஏற்றெழுந் ததன்பின் இனியோர் குழீஇ
          ஆற்றல் சான்ற நூற்றுறை மருங்கிற்
          பழையவும் புதியவும் உழைவயிற் பிரியார்
          காரணம் உரைப்பவும் ஓர்வரை நில்லான்
     5    அந்தீங் கிளவியென் அம்பிணை மூழ்கிய
          செந்தீ யானும் புகுவென் சென்றென
          முரிந்த கந்தின் எரிந்த வேயுள்
          அரிந்த யாப்பிற் சொரிந்த கடுங்காழ்
          கரிந்த மாடங் காவலன் குறுக
 
        1 - 9 ; ஏற்றெழுந்து.........குறுக
 
(பொழிப்புரை) இவ் வண்ணம் உதயண குமரன் நினைவு மீண்டு கண் மலர்ந்து எழுந்த பின்னர் இனிய தோழர்கள் சூழ்ந்து கொண்டு அவனது துன்பம் துடைத்தற் பொருட்டு அறிவாற்றல் நிரம்பிய மெய்ந்நூல்களினின்றும் துன்பந் தவிர் தற்குக் காரணமான பழையனவும் புதியனவும் ஆகிய நீதிகளை எடுத்துக் கூறா நிற்பவும், அவ்வறி வெல்லையில் நில்லானாய் ''என் அந்தீங் கிளவியையுடைய அம்பிணை போல்வாள் மூழ்கி யிறந்த இச்செந்தீயின்கண் யானும் மூழ்கி உயிர் நீப்பென்'' என்று கூறி முரிந்த தூணையும் எரிந்த கூரையினையும் அறுபட்ட கட்டி னையும் வீழ்ந்த கைமரங்களையும் உடைத்தாய்க் கரிந்து போன அம்மாடத்தை அணுகாநிற்ப என்க.
 
(விளக்கம்) 1. உணர்ச்சி ஏற்று எழுந்த பின்னர் என்க.
    2. ஆற்றல் நிறைந்த அறிவுரைகளையுடைய மெய்ந்நூல்களினின்றும் என்க.
    3-4. பழைய காலத்தனவும் புதிய காலத்தனவும்
  ஆகிய காரணங்களை எடுத்துக்காட்டிக் கூறவும் என்க  உழைவயின்-பக்கத்தினின்றும். ஓர்வரை - ஓர் அறி வெல்லை.
    5-6, அழகிய இனிய மொழிகளையுடையவளும், அழகிய பெண்மான் போன்றவளுமாகிய என் தேவி மூழ்கியிறந்த தீயின்
  கண் என்க
    7. கந்து-தூண். வேயுள்-கூரை.
    8. அரிந்த யாப்பு-அறுபட்ட கட்டு, கடுங்காழ்-திண்ணிய கைமரங்கள்.
    9, காவலன் ; எழுவாய்;உதயணகுமரன்.