பக்கம் எண் :

பக்கம் எண்:1

உரை
 
3. மகத காண்டம்
 
1. யாத்திரை போகியது
 
           ஆங்கினி திருந்த காலை யீங்கினி
           வேந்துபடக் கடந்த வேந்துசுடர் நெடுவேல்
           உதயண னிலைமை யிதுவென வுரைப்பேன்
 
                 (ஆசிரியர் கூற்று)
            1 - 3 : ஆங்கு............உரைப்பேன்
 
(பொழிப்புரை) இவ்வாறு யூகி வாசவதத்தை முதலியோருடன்
  சண்பை நகரத்தே முட்டில் வாழ்க்கைச் செட்டியர் பெருமகன்
  மித்திரகாமன் பெருமனையின் இனிதே ஒடுங்கி இருந்தபொழுது,
  வத்தவநாட்டிலே இலாவாண நகரத்தே இருந்தவனும் பகைவேந்தர்
  பலரும் மாண்டொழியும்படி வென்று வாகை சூடிய வேந்தனும்
  ஒளிவீசும் வேற்படையையுடையவனும் ஆகிய உதயண மன்னனுடைய
  நிலைமை இங்ஙனமிருந்தது என்று இனிக் கூறா நிற்பேன் கேளுங்கோள்
  என்க.
 
(விளக்கம்) ஆங்கு என்றது, சண்பை நகரத்து மித்திரகாமன்
  இல்லத்தை; ஈங்கு என்றது இலாவாண காண்ட நகரத்து அரண்மனையை
  என்க,
  ஏந்தா நின்ற சுடர்வேலுமாம்.
     இஃது ஆசிரியர் நுதலிப்புகுதல் என்னும் உத்தியால் தோற்றுவாய்
  செய்தபடியாம்,