பக்கம் எண் :

பக்கம் எண்:100

உரை
 
3. மகத காண்டம்
 
6. பதுமாபதியைக் கண்டது
 
         
     
            நன்றான் மற்றது கேளாய் நன்னுதல்
     190    கண்டார் புகழுங் கலக்கமில் சிறப்பிற்
           காந்தார மென்னு மாய்ந்த நாட்டகத்
           தீண்டிய பல்புக ழிரத்தின புரத்துள்
           மாண்ட வேள்வி மந்திர முத்தீச்
           சாண்டி.ய னென்னுஞ் சால்புடை யொழுக்கின்
     195   ஆய்ந்த நெஞ்சத் தந்தணன் மகனென்
 
           உதயணன் விடை
      189-195 : நன்றால்...........,மகனென்
 
(பொழிப்புரை) அயிராபதியின் வினாக்களைக் கேட்ட உதயண குமரன
  ''நன்று நன்று; நல்ல நு தலையுடையோய்! நின் வினவிற்கு
  விடை கூறுவேன்; கேள் ! யான், கண்டோர் பெரிதும்
  புகழ்தற்கிடமானதும்  கலக்கமில்லாத சிறப்பினையுடையதுமாகிய
  'காந்தார' மென்னும் பிறரால் ஆராயப்பட்ட நாட்டின்கண்
  செறிந்த பலவாகிய புகழ்களையுமுடைய'இரத்தினபுரம்' என்னும்
  நகரத்திலே  வாழ்பவனும் மாட்சிமையுடைய வேள்வியிலே
  மந்திரமோதி மூன்று தீயையும் ஓம்புகின்றவனும், 'சாண்டியன்'
  என்னும் பெயரை  யுடையவனும் சான்றாண்மைக்குரிய
  நல்லொழுக்கங்களையுடையவனும் நூல்களை ஆராய்ந்துணர்ந்த
  நன்னர் நெஞ்சமுடையவனும் ஆகிய அந்தணனுடைய மகனாவேன்
  என்க,
 
(விளக்கம்) நன்னுதல்;விளி. பகைவராலே கலக்கம் இல்லாதது
  என்றபடியாம். ஈண்டிய-செறிந்த. வேள்வியின்கண் மந்திரமோதி
  மூத்தீ ஓம்பும் சாண்டியன் என்க. சால்பு-நற்குணங்களானிரம்பு
  தல். ஆய்ந்த நெஞ்சம்-நுண்மாணுழை புலனுமாம். மகனென் 
  தன்மையொருமை.