உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
பொன்னிழை
யிந்நகர் புகுது மோவென
வேண்டா வென்றபின் மீண்டுமேக்
கோங்கி நாளு நாளு
நன்கன மோட
யாழின் கிழவ னிங்ஙன நினைஇ
105 ஊழி னூழி னுள்ள
மூக்கிக் கோளுங்
குறியுங் கொண்டன னாகி
முகிலுளங் கிழிய வகல்விசும்
பேறி எழுச்சி
யெல்லை முனிந்த பின்னர்
|
|
(இதுவுமது) 101
- 108 : பொன்னிழை..............பின்னர்
|
|
(பொழிப்புரை) 'பொன்னாலியன்ற அணிகலனணிந்த நங்காய் ! யாம் இந்த இராசகிரிய நகரத்தின்கண்
இவ்விமானத்தை இறக்கி அந்நகரத்தின்கண் புகுவோமோ ?' என்று வினவாநிற்ப, அதுகேட்ட
வாசவதத்தை பறந்து செல்லுதலிலேயே வேட்கை மிக்கவளாய் வேண்டா என்று விடை இறுத்தபின்,
மீண்டும் வானவெளியிலே மேலே உயர்ந்து நாளும் நாளும் நன்றாக அவ்விமானம் பறந்து
செல்லும்படி யாழ் வித்தைக்குச் சிறப்புரிமை யுடையவனாகிய அவ்வுதயணமன்னன் இவ்வாறு
நினைத்து முறை முறையே அவ்விமானத்தைச் செலுத்தி அவ்விமானத்தினது இயல்பினையும்
குறிக்கோளினையும் நன்கு பழகிக்கொண்டவனாய் முகில்களின் நெஞ்சு கிழியும்படி அகன்ற
வானத்திலே ஏறி அவ்விமானம் எழுவதற்குரிய எல்லைவரை எழுந்து முடிந்தபின்னர்
என்க.
|
|
(விளக்கம்) பொன்னிழை : அன்மொழி வாசவதத்தை.
இந்நகர் - இராசகிரியம். மேக்கு - மேலே. யாழின் கிழவன் : உதயணன். கோளுங்குறியும்
கொண்டனனாகி, முகிலுளங்கிழிய என்னும் இத்தொடர் முன்னும் (86 - 87) அடிகளில் வந்தமை
காண்க. எழுச்சி எல்லை என்றது விமானம் பறத்தற்குரிய காற்றியக்கம் இருக்குந்துணையும்
என்க. அதற்கு மேல் பறக்கவியலாமையால் அஃது எழுச்சி எல்லையாயிற்று. முனிதல் - மேலே
பறத்தற்கு விரும்பாமை.
|