பக்கம் எண் :

பக்கம் எண்:1004

உரை
 
5. நரவாண காண்டம்
 
   4. வயாத் தீர்ந்தது
 
         
    130    எச்சார் மருங்கினு மினிதி லுறையும்
          விச்சா தரரின் விதியினைக் காட்டி
          விராய்மலர்க் கோதைய ரூராஅ வூக்கமொ
          டொருங்குபல கண்டு விரும்புவன ராகி
          அசும்புசோர் முகிலுடை விசும்புபோழ்ந் தியங்கிய
    135    அப்பா லெல்லை முடிந்தபி னிப்பால்
 
                      (இதுவுமது)
             130 - 135 : எச்சார்............முடிந்தபின்
 
(பொழிப்புரை) அவ்வித்தியாதர ருலகின்கண் எல்லா இடங்களிலும் இனிதாக வாழுகின்ற அவ்விச்சாதரருடைய வாழ்க்கை முறையினை வாசவதத்தை முதலிய வயாவிருப்பமுடைய அம்மகளிர்க்கெல்லாம் காட்டாநிற்றலாலே விராய்மலர் மாலையணிந்த அம் மகளிரெல்லாம் நீங்காத ஊக்கத்தோடே ஒருங்கே பலவாகிய அக்காட்சிகளையெல்லாம் கண்டு கண்டு மேலும் காண விரும்புவாராய் நீர்த்துளிகள் வீழ்கின்ற முகில்களையுடைய வானின்கண்ணே ஊடறுத்து இயங்கா நின்ற அவ்வித்தியாதரருலகின் எல்லை முடிந்தபின்னர் என்க.
 
(விளக்கம்) விதி - நாடு நகரம் முதலியன அமைத்து வாழும் முறை. விராய்மலர் ஒருவகை மலர். கோதையர்: வாசவதத்தை முதலிய மகளிர். உராஅ - நீங்காத. அசும்பு - நீர்த்துளி. அப்பால் எல்லை - அவ்வித்தியாதரருலகின் எல்லை.