உரை |
|
5. நரவாண காண்டம் |
|
4. வயாத் தீர்ந்தது |
|
தண்டா
ரணியமுந் தாபதப் பள்ளியும் 145
வண்டார் சோலையும் வளங்கெழு
மலையும் மயிலாடு
சிமையப் பொதியிலு
மதன்மிசைக் குளிர்கொள்
சந்தனத் தொளிர்மலர்க் காவும்
காவி னடுவண வாவியுங்
கதிர்மணித் தேவ
குலனுந் தென்பா லிலங்கையும் 150
....................காண்டகப்
பொலிந்த அராஅந்
தாணமு மணிமணற் றெண்டிரைக்
குமரித் துறையு மமர்வனர் நோக்கி |
|
(இதுவுமது)
144 - 152 :
தண்டாரணியம்............நோக்கி |
|
(பொழிப்புரை) தண்டகாரணியத்தையும் ஆங்குள்ள துறவோர் பள்ளிகளையும் வண்டுகள் முரலும்
சோலைகளையும் வளம்பொருந்திய மலைகளையும் கண்டு சென்று அப்பாலுள்ள மயில்கள் ஆடுகின்ற
சிகரங்களையுடைய பொதிய மலையினையும் அதன் மேலுள்ள குளிர்ச்சியையுடைய சந்தன
மரங்களையுடைய ஒளிருகின்ற மலர்ச் சோலைகளையும் அச்சோலைகளினிடையே அமைந்தனவாகிய
நீர் நிலையினையும் ஒளிமணி பதித்தியற்றிய கோயில்களையும் கண்டு வணங்கி அப் பொதிய
மலையின் தென்பாலுள்ள இலங்கையினையும் கண்டு
ஆண்டுள்ள.........................அழகால் தகுதி பெற்றுப் பொலிந்துள்ள அருகன்
கோயில்களையும் வணங்கி மீண்டும் வந்து அழகிய மணற்பரப்பிலே தெளிந்த அலைபுரளாநின்ற
கடலினது குமரித் துறையினையும் பெரிதும் விரும்பி நோக்கி என்க. |
|
(விளக்கம்) தண்டாரணியம் என்னுங் காடு. தாபதப்
பள்ளி - துறவோர் இருக்கை. சிமையம் - சிகரம். அதன்மிசை - அப்பொதிய
மலையின்மேல். தேவகுலன் - கோயில். 150 ஆம் அடியில் முற்பகுதி இரண்டு சீரழிந்தன.
அராஅந்தாணம் - அருகன் கோயில். குமரித்துறை - கன்னியாகுமரிக்
கடற்றுறை. |