(பொழிப்புரை) பின்னரும்
வானத்தினுள்ளனவும் மலையின் மேலுள்ளனவும் பிறவும் ஆகிய விரும்பப்படுவனவற்றை யெல்லாம்
அவ்வுதயண மன்னன் ஒள்ளிய நெற்றியுடைய வாசவதத்தையையுள்ளிட்ட அம் மகளிரெல்லாம் கண்டு
மகிழும்படி காட்டி இவ் வானவெளிச் செலவின்கண் அம் மன்னன் தன் நல்ல துணைவராகிய
தோழர் நால்வரோடும் பொன்வளையணிந்த மாதர்களோடும் நாள்கள் பல போக்கி
ஆங்காங்கே தன் நகரத்திற்கு வேண்டிய பெறற்கரிய அணிகலம் பலவற்றை ஈட்டிக் கொண்டு
இதனால் தன் பெருந்தேவியாகிய வாசவதத்தை முதலியோருடைய மிக்க வயா நோயைத் துவர
நீக்கித் தம்மைப் பிரிந்திருத்தலால் தனது நல்ல கோசம்பியில் வாழும் மாந்தர்
மெலிவர் என்பதனையும் அந் நகரின் செல்வ நுகர்ச்சியினையும் நினைத்தவனாய்ப் புகழை
விரும்புகின்றவனாகிய அவ்வுதயணன் மீண்டு பொன்னாலியன்ற தனது கோசம்பி நகரத்தின்கண்
புகுந்தான் என்க.
(விளக்கம்) விண்ண, மலைய, மேவன என்னும் இம்
மூன்றும் பலவறி சொல். நன்னகர்: ஆகுபெயர். பொன்னகர் - கோசம்பி. புகழ் வெய்யோன்
: புகழை விரும்பும் உதயணன்.