உரை |
|
5. நரவாண காண்டம் |
|
5. பத்திராபதி உருவுகாட்டியது |
|
பொன்னகர் புக்கபின் புகழ்மீக்
கூறி
மின்னிலங் கவிரொளி வெய்யோன்
மேவும் வைய
மியற்றிய கைவினை யாளன்
வருக வென்றுதா னருளொடு பணிப்ப
5 நயந்துவந் திறைஞ்சிய வையத்
தலைவனை
வியந்த விருப்பொடு நயந்துமுக
நோக்கித்
தொல்லைச் செய்த நன்னரு
மறியேம்
எல்லையில் பெருந்துய ரெய்தின மகற்றினை |
|
(உதயணன்
தச்சவுருவங் கொண்ட
பத்திராபதியை அழைத்துக்
கூறல்)
1 - 8 : பொன்னகர்...........அகற்றினை
|
|
(பொழிப்புரை) இவ்வாறு உதயண
மன்னன் வாசவதத்தையின் வயா நோய் தீர்த்து அழகிய தனது கோசம்பி நகரத்திற் புகுந்த
பின்னர் மின்னல் போல விளங்குகின்ற விரிந்த ஒளியையுடைய கதிரவனாலும் விரும்புதற்குத்
தகுந்த வானவூர்தியை இயற்றித் தந்த கைத்தொழில் வல்லவனாகிய அத்தச்சனுடைய புகழை
அவையோர் உணரும்படி மிகுத்துக் கூறி அத்தச்சன்பால் அருளுடையனாய் அவன் இங்கு வருவானாக
என்று கட்டளை இடுதலாலே, மன்னவன் அழைப்பினை விரும்பித் தன் முன்னிலையில் வந்து
வணங்கி நின்ற விமானத் தலைவனாகிய அத்தச்சனை உதயணன் வியந்த விருப்பத்தோடே அவனை
நயந்து அவன் முகத்தை நோக்கித், ''தச்சுவினை வல்லோய்! யாங்கள் உனக்கு முன்பு
யாதொரு நன்மையும் செய்தறியோம். அங்ஙனம் இருப்பவும் நீ வலியவந்து எமக்கெய்தி
யிருந்த எல்லையில்லாத பெரிய துன்பத்தைக் களைந்தனை!''என்க.
|
|
(விளக்கம்) பொன்னகர் - கோசம்பிநகர். உதயணன் நகர் புக்க
பின் புகழ் மீக் கூறப்பட்டு எனினுமாம். மின்னிலங்கு அவிரொளி வையம், வெய்யோன்
மேவும் வையம் எனத் தனித்தனி கூட்டுக. கைவினையாளன் - தச்சன். வையத்தலைவன் -
தச்சன். வையம் ஈண்டு விமானம். தொல்லை - முன்பு. நன்னர் - நன்மை. பெருந்துயர்
என்றது வாசவதத்தையின் வயா நோய் தீர்க்கலாகாமையை. இனி வெய்யோன் - உதயணன்
எனக் கொண்டு அதற் கேற்பக் கூறினும் அமையும்.
|